“என் வாழ்நாள் பெருமை., மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிட தேவையில்லை!” முதலமைச்சர் பெருமிதம்!
மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நேரடியாக நியமனம் செய்யப்படும் வகையில் 2025 தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி திருத்த சட்ட வரைவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு வந்தார். அந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் போது, முதலமைச்சர் பேசுகையில் இது என் வாழ்நாள் பெருமை என பேசினார்.
இந்த சட்டத்திருத்தம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ” இதற்கு முன்னர் அருந்ததியினர் மக்களுக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை வழங்கும் பலனை நான் இதே சட்டமன்றத்தில் அடைந்தேன். 2009-ல் முதலமைச்சர் கலைஞர் அந்த வாய்ப்பை எனக்கு அளித்தார். அதே போல மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதித்துவம் பற்றி தாக்கல் செய்யும் மசோதாவும் என் வாழ்நாள் பெருமை என குறிப்பிட்டார்.
சட்டமசோதா பற்றி பேசுகையில், ” நகராட்சி நிர்வாகம் மற்றும் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடாமல் நியமன அடிப்படையில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். அதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநித்துவம் உறுதி செய்யப்பட்டு தங்களுக்கான வாய்ப்புகளை பெற இந்த சட்ட மசோதா வழிவகுக்கும்.
இதற்காக தமிழ்நாடு அரசு ஊராட்சி சட்டம் 1994, நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதனை அந்தந்த துறைகளுக்கு பரிந்துறை செய்கிறேன். அவர்கள் குரல் உள்ளாட்சியில் எதிரொலிக்கும். உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்துபவர்களாக அவர்கள் மாறுவார்கள். அந்த அடிப்படையில் தான் இதனை செய்கிறோம். அதன்படி 2025ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி திருத்த சட்ட வரைவை இங்கு தாக்கல் செய்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். ஆனால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் 650 பேர் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 12,913 பேர் கிராம பஞ்சயாத்து களிலும், 388 பேர் ஊராட்சி ஒன்றியங்களிலும், 37 மாவட்ட ஊராட்சிகளிலும் நியமனம் செய்யப்படுவார்கள் என அதன் பலன் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.
அதன்பிறகு, 2025-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி திருத்த சட்ட வரைவு நிறைவேற்றம் செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு பேரவையில் தெரிவித்தார்.