“சீக்கிரமா குழந்தைகள் பெத்துக்கோங்க..,” மீண்டும் ‘அதனை’ குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர்!
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுவதால் சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகை திருமண விழாவில் பேசினார்.

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி வைத்தும் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு நாகை மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்றார்.
நாகை மாவட்டம் புத்தூரில், திமுக மாவட்ட செயலாளரும், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவருமான ந.கௌதமன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினாா். அப்போது அங்கு பேசிய முதலமைச்சர், மணமக்களை சீக்கிரம் குழந்தை பெற்று கொள்ளுங்கள் என பேசினார்.
அவர் மேலும் பேசுகையில், மத்திய அரசு மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது. அடுத்து, தொகுதி மறுசீரமைப்பு என தமிழ்நாட்டின் உரிமையை மத்திய அரசு பறிக்க பார்க்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மூலம், நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் உரிமையை தமிழ்நாட்டிற்கு குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து விவாதிக்கவே, வரும் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள 40க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான கட்சிகள் வருவதாக கூறியுள்ளனர். குறிப்பிட்ட சிலர் மட்டும் வர முடியாது என கூறியுள்ளனர். இந்த தொகுதி மருவரையரை என்பது திமுக பிரச்சனை அல்ல. இது தமிழ்நாட்டின் பிரச்சனை.
முன்பெல்லாம் திருமண விழாவுக்கு சென்று அங்கு மணமக்களை வாழ்த்திவிட்டு குழந்தைகளை பொறுமையாக பெற்றுக்கொள்ளுங்கள் என கூறுவோம். ஆனால், இப்போது அப்படி சொல்ல முடிவதில்லை. மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால், நான் அப்படி சொல்ல மாட்டேன். சீக்கிரம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள். தம்பதிகளுக்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்று தான். உங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.