பொங்கல் செலவுக்கு ரூ.8000.. மக்கள் மகிழ்ச்சி.! முதல்வர் பெருமிதம்.!
கடந்த 2 ஆண்டுகளாக ஜனவரி மாதம் 12ஆம் தேதி அயலக தமிழர்கள் மாநாடு தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதியான இன்று சென்னை, நந்தம்பாக்கத்தில் அயலக தமிழர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பல்வேறு அயலக தமிழர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு அயலக தமிழர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அமோனியம் வாயு கசிவு…இழப்பீடு வழங்க முடிவு..?
இதனை தொடர்ந்து அயலக தமிழர்கள் விழா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் கூறுகையில், எனக்கு உடல் நலம் சரியில்லை என்று சில பத்திரிகைகளில் போட்டுள்ளனர். அதே நேரத்தில் நேற்று நான் ஒரு வீடியோ பார்த்தேன். அதில், சென்னையை சேர்ந்த ஒரு சகோதரி தனக்கு 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையும் வந்துவிட்டது. 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகையும் வந்துவிட்டது. அரிசி, சர்க்கரை, கரும்பு வந்துவிட்டது. வெள்ள நிவாரணமாக 6000 ரூபாய் வந்துவிட்டது. இந்த பொங்கல் செலவுக்கு 8000 ரூபாயை தமிழக முதல்வர் தந்துவிட்டார் என மகிழ்ச்சியோடு கூறினார். அவரது முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி தான் எனது உற்சாக மருந்து என பெருமையாக தெரிவித்தார் முதல்வர்.
அடுத்ததாக, நான் எந்த சூழ்நிலையிலும் மக்கள் உடன்தான் இருக்கிறேன். என் சக்திக்கு மீறி நான் உழைப்பேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உலக முதலீடு மாநாடு நடைபெற்றது. அதன் மூலம் தமிழகத்தின் நிதிநிலைமை பலப்படுத்தப்பட்டது. அதேபோல் உலகத்தை வலுப்படுத்த சென்ற தமிழர்களுக்காக இன்று அயலக மாநாடு நடைபெறுகிறது. இதில் சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் வருகை தந்துள்ளார். அது மிகவும் பெருமைக்குரிய நிகழ்வு.
நான் சிங்கப்பூர் சென்று இருந்த போது அமைச்சர் சண்முகம் என்னை வரவேற்று சிறப்பாக மரியாதை அளித்தார். அதேபோல் தமிழகம் வந்த சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் அவர்களை எனது வீட்டிற்கு வரவழைத்து நான் சிறப்பித்தேன். உலகமே கவனிக்கும் தமிழராக அவர் வளர்ந்துள்ளார்.
வெளிநாடு வாழ் புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர், வெளிநாடு வாழ் நலப்பிரிவு அரசாணையை வெளியிட்டு இருந்தார். ஆனால், அதற்கு பிறகு வந்த அரசாங்கம் அதனை செயல்படுத்தவில்லை. ஆனால் தற்போது தமிழக அரசு வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கி உள்ளது. இதில் ஒரு தலைவர் 15 உறுப்பினர்கள் உள்ள வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியம் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும், வெளிநாடு வாழ் தமிழர்களின் குழந்தைகளிடம் தமிழை வளர்க்கும் வண்ணம் தமிழ் இணைய வழி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் கைது செய்யப்படும் தமிழர்களுக்கு உரிய சடட உதவிகள் இந்த துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடு தமிழர்களுக்கு அங்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவி புரிய, மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக டிஜிபி அலுவலகத்தில் இதற்கான தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், வெளி மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்கும் இந்த துறை உதவி செய்கிறது. ஏற்கனவே, மணிப்பூர் கலவரம், அமர்நாத் மண்சரிவு உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழர்களுக்கு ஆதரவாக இந்த வாரியம் செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் நலம் காக்க கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதிக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஏதுவாக இங்கு உள்ள நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. ஆண்டுதோரும் ஜனவரி 12-ம் தேதி அயலக தமிழர்கள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மூன்று வருடமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இது போக, “வேர்களை தேடி” எனும் திட்டம் மூலம் உலகம் முழுவதும் உள்ள 200 தமிழ் இளைஞர்களை தேர்வு செய்து அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வருகிறோம். அதேபோல் இந்த ஆண்டு 58 தமிழர்களை இளைஞர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து தமிழர்களின் பெருமைகளை அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளோம். அவர்கள் அது குறித்து பெருமைப்பட பேசினர் என முதல்வர் விழாவில் பேசினார்.
இறுதியாக, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நான் கூறிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். எங்கு வாழ்ந்தாலும், தமிழையும் மறக்காதீர்கள். தமிழ்நாட்டையும் மறவாதீர்கள். தமிழோடு இணைந்து இருங்கள் என்று கூறி நன்றி தெரிவித்து தனது உரையை முடித்து கொண்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.