“திருவள்ளுவரை களவாட ஒரு கூட்டமே காத்திருக்கிறது” மு.க.ஸ்டாலின் பேச்சு!
மூக நீதி கருத்துக்களை கூறிய திருவள்ளுவரை சிலர் கபளீகரம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என காரைக்குடியில் நூலகம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சிவகங்கை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இன்றும் நாளையும் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து கள ஆய்வில் ஈடுபட உள்ளார். அப்போது பல்வேறு நல திட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் உள்ளார்.
இந்நிலையில், காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தால் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ” அழகப்பர் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலையை திறப்பதில் மகிழ்ச்சி. சமூக நீதி கருத்துக்களை கூறிய திருவள்ளுவரை சிலர் கபளீகரம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ” என கூறினார்.
மேலும், “முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்கள் அரசியல், பொருளாதரம், இலக்கியம் என பல்வேறு துறைகளில் நிறைவான அறிவை பெற்றவர். பல்வேறு பொருளாதார முக்கிய நகர்வு சமயங்களில் பா.சி என்ன கருத்து கூறுகிறார் என்பதை தான் நான் பார்ப்பேன். அவர் தற்போது நூலகத்தை அமைத்துள்ளார் என்பதில் மகிழ்ச்சி. இது போல பலரும் தங்கள் வசதிக்கேற்ப நூலகங்களை திறக்க வேண்டும். அல்லது படிப்பகங்களையாவது திறக்க வேண்டும்.” என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், “நானும் என்னை பார்க்க வருவோரிடம் சால்வை வேண்டாம். புத்தகங்கள் வாங்கி வாருங்கள் என கூறுவேன். அப்படி என்னிடம் 2.75 லட்சம் புத்தகங்கள் வந்துள்ளன. அதனை பல்வேறு நூலகங்களுக்கு நான் அனுப்பியுள்ளேன். தற்போது இந்த நூலகத்திற்கு தனிப்பட்ட முறையில் முதற்கட்டமாக 1000 புத்தகங்களை அனுப்ப உள்ளேன். அதே போல அரசு சார்பில் மேலும் சில நடவடிக்கைகளை எடுப்பேன். ” என கூறினார்.
இளைஞர்கள் பற்றி கூறுகையில், “கல்வி மிக முக்கியம். யாராலும் எடுத்துவிட முடியாத செல்வம் கல்வி செல்வம். அதனை மனதில் வைத்தே தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. புதுமை பெண் திட்டம் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது. அதேபோல தமிழ் புதல்வன் திட்டம் மூலமும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. முதல்பட்டதாரி நலத்திட்டங்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை பயிற்சி அளிக்கபட்டு வருகிறது இவ்வாறு மாணவர்களின் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.