பல்வேறு தடைகளை தகர்த்து ஜல்லிக்கட்டை மீட்டது திமுக.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

MK Stalin - Alanganallur Kilakarai Jallikattu stadium

இன்று  மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள கீழக்கரை கிராமத்தில் வகுத்தமலை அடிவாரத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 5000 பேர் ஒரே இடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை காணும் வகையில் 66 ஏக்கரில் பிரமாண்டமாக இந்த ஜல்லிக்கட்டு மைதானம் அமைந்துள்ளது.

இந்த பிரமாண்ட மைதானத்தை முதல்வர் திறந்து வைத்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா மேடையில் உரையாற்றினார். அவர் பேசுகையில், ஜல்லிக்கட்டை போற்றும் வகையில் பிரமாண்ட மைதானம் இன்று திறக்கப்பட்டது சிறப்பு. கலைஞர் நூற்றாண்டு ஆண்டில் ஜல்லிக்கட்டு மைதானம் திறக்கப்பட்டது கூடுதல் சிறப்பு.

3 ஆண்டுகள் – 3 சின்னங்கள் :

திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் மதுரைக்கு 3 முக்கிய சின்னங்களை ஏற்படுத்தி உள்ளோம். ஒன்று மதுரைக்கு அருகில் உள்ள கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அடுத்து, கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக தற்போது கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டில் மத்திய அரசால் மதுரைக்கு அறிவிக்கப்பட்ட முக்கியமான திட்டம் இன்னும் கொண்டுவரப்படவில்லை (மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை) . அந்த திட்டம் உங்களுக்கு நியாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை.

ஜல்லிக்கட்டு மூர்த்தி :

இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை வடிவமைத்து கட்டிமுடித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலுக்கு பாராட்டுக்கள். அவரின் சாதனை பட்டியலில் ஏறுதழுவுதல் அரங்கமும் சேர்ந்துள்ளது. அடுத்து சென்னையில் கலைஞர் நினைவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. விழா ஏற்பாட்டை பிரமாண்டமாக அமைச்சர் மூர்த்தி ஏற்பாடு செய்துள்ளார். தை மாதம் பிறந்தால் அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறி சட்டமன்றத்திற்கு கூட வராமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஏற்பாடு செய்ய ஆரம்பித்து விடுகிறார். ஏறுதழுவுதலை உயிராக கருதுகிறார் அமைச்சர் மூர்த்தி.

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

பாரம்பரிய குறிப்புகள் :

ஜல்லிக்கட்டு காளைகள் நமது வரலாற்றில் நீண்ட ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த காளையின் எலும்புகூடுகள் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டன.  முல்லை நில மக்களின் வீரவிளையாட்டாக ஏறுதழுவுதல் நிகழ்வு உள்ளது. கலித்தொகை பாட்டில் கூட ஏறுதழுவுதல் குறிப்பிடபட்டுள்ளது. தை மாதம் முதல் 3 நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்பட கூடாது என ஆங்கிலேயர்கள் காலத்து கவர்னர்கள் கூறியிருக்கிறார்கள். தமிழர்கள் பண்பாட்டை அந்த காலத்து கவர்னர்கள் உணர்ந்து இருந்துள்ளார்கள்.

ஜல்லிக்கட்டு – திமுக :

கலைஞர் ஜல்லிக்கட்டு மீது மிகுந்த விருப்பம் கொண்டவர். அதனால் தான் தான் ஆரம்பித்த முரசொலி நாளிதழில் கூட ஏறுதழுவுதல் காட்சியை சின்னமாக வைத்தார்.  1974 ஜனவரியில் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியவர் கலைஞர் கருணாநிதி.  2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்ட போது, பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என உறுதியளித்து தடையை நீக்கியவர் கலைஞர்.

மெரினா புரட்சி :

அதே போல, 2007இல் உச்சநீதிமன்றம் தடைவிதித்த போது வலுவான வாதங்கள் வைத்ததும் திமுக தான். 2014ஆம் ஆண்டு தடை ஏற்பாடு ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் வந்த போது, இளைஞர்கள் மெரினா புரட்சியை கொண்டுவந்து ஜல்லிக்கட்டை மீட்டனர். அமைதியான முறையில் போராடியவர்கள் மீது வன்முறையை ஏவியது அதிமுக அரசு. அதன் பிறகு ஏறுதழுவதல் போட்டிக்கு உறுதியான முடிவு எட்டப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அனுமதி தருகிறோம் தருகிறோம் என கூறி ஏமாற்றி வந்தனர்.

பண்பாட்டு அடையாளம் :

ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் மத்திய அரசு, நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டியை அங்கீகரிக்கவில்லை. அதனை ஊக்குவிக்கும் திட்டம் இல்லை என விளக்கம் அளித்தது. ஆனால், திமுக அரசு, ஜல்லிக்கட்டு போட்டி என்பது வெறும் விளையாட்டு அல்ல. அது பண்பாட்டு அடையாளம். பாதுகாப்பாக நாங்கள் ஜல்லிக்கட்டை நடத்தவோம் என உறுதியளித்து தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகிறோம் .

இவ்வளவு தடைகளையும் தாண்டி தான்  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதில், மனிதர்களை பிரிக்கும் சாதி , மத, இனங்களை தவிர்த்து அனைவரும் ஒற்றுமையாக ஜல்லிக்கட்டு போட்டியை கொண்டாடி மகிழ வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror
Khawaja Asif
Pahalgam Terrorist Attack