“மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்., இல்லையென்றால்.,” அன்புமணி ஆவேசம்! 

எங்கள் தந்தை ராமதாஸ் ஐயாவை அவமானப்படுத்திவிட்டார் முதலமைச்சர், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.

Tamilnadu CM MK Stalin - PMK Leader Anbumani Ramadoss

டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், “அவருக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதேனும் ஒரு அறிக்கை விடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என கூறிவிட்டு சென்றார்.

இதனை குறிப்பிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் பாமக தலைவரும், டாக்டர் ராமதாஸ் மகனுமான அன்புமணி ராமதாஸ். இவர் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ” டாக்டர் ராமதாஸ் தினமும் அறிக்கை வெளியிட்டு கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபத்துடன் பதிலளித்து சென்று விட்டார். இது கண்டிக்கத்தக்கது.

இன்று இந்தியாவிலேயே ஒரு மூத்த அரசியல் தலைவர் எங்கள் மருத்துவர் ஐயா (டாக்டர் ராமதாஸ்).  அவருக்கு வயது 86. இன்று இந்திய அளவில் பிரதமர் மோடியால் போற்றப்பட்டு, இந்தியாவில்  உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் மதிக்கும் இந்த சூழலில், ஒரு முதலமைச்சர் இவ்வளவு ஆணவத்துடன் பேசுவது அந்த பதவிக்கு அழகல்ல.

அவர் (ராமதாஸ்) என்ன கேள்வி கேட்டார், அதில் என்ன தவறு? கௌதம் அதானியை உங்கள் இல்லத்தில் எதற்கு நீங்கள் ரகசியமாக சந்தித்தீர்கள்? இதில் என்ன தப்பு இருக்கிறது? எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் கேள்வி கேட்பது எங்கள் உரிமை, பதில் சொல்ல வேண்டியது உங்கள் கடமை. அதை விட்டுவிட்டு எங்கள் மருத்துவர் ஐயா அவர்களை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி விட்டீர்கள். இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

எங்கள் மருத்துவர் ஐயா இல்லை என்றால் , 2006இல் உங்கள் தந்தை (கலைஞர் கருணாநிதி) முதலமைச்சராகி இருக்க முடியாது. ஜெயலலிதா அவர்களால் தொடர்ந்து மைனாரிட்டி அரசு என விமர்சனம் செய்து வந்த போது, அந்த காலத்திலேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். அதனால் தான் ஐந்தாண்டு காலம் முதலமைச்சராக உங்கள் தந்தை இருந்தார். நீங்கள் துணை முதலமைச்சராக இருந்தீர்கள்.

எங்கள் தந்தை இல்லை என்றால் உங்கள் தந்தையை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்திருக்க முடியாது. மணிமண்டபம் கட்டி இருக்க முடியாது. நாங்கள் போட்ட அந்த வழக்கை அன்று (கலைஞர் கருணாநிதி மறைந்த தினம்)  இரவு திரும்ப பெற்றோம். நாங்கள் வாபஸ் பெற்றதால்தான் மெரினாவில் அடக்கம் செய்யலாம் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அன்று நாங்கள் முடியாது என்று சொல்லியிருந்தால் இன்று கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்திருக்க முடியாது.

இப்படியெல்லாம் இருந்தும் எங்கள் ஐயாவை ஒரு மூத்த அரசியல்வாதியை, இந்தியா முழுக்க 6% இட ஒதுக்கீடுகளை பெற்றுத்தந்த சமூக சீர்திருத்தவாதியை பார்த்த அவருக்கு, அவருக்கு வேலையில்லை என்று சொல்வது எவ்வளவு ஆணவம்? உங்கள் தந்தையிடம் நீங்கள் எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை.

தினமும் அறிக்கை விடுவது என்பது எங்கள் யோசனைகள். அது எங்கள் கடமை. எங்கள் உரிமை. தமிழ்நாடு மக்கள் நலம் பெற வேண்டும், தமிழ்நாடு மக்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்ற காரணத்தால் அறிக்கை வெளியிடுகிறோம். அதில் நல்ல யோசனைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் என்ன கேள்வி கேட்டோம்? ஏன் அதானி உங்கள் வீட்டிற்கு வந்தார்? அது அதிகாரபூர்வ சந்திப்பா? தனிப்பட்ட சந்திப்பா? வீட்டில் ஏன் அந்த சந்திப்பு நடந்தது? என்று கேட்டோம். அமெரிக்காவிலே தமிழ்நாடு மானம் கப்பலேறி போய்க்கொண்டிருக்கிறது. அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி குழுமம் இந்தியாவில் உள்ள ஐந்து மாநில அரசியல் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.  தமிழ்நாடு,  ஆந்திரா, ஒரிசா , சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல்  தலைவர்களுக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர் என இந்திய மதிப்பில் 2000 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு பதில் சொல்ல வேண்டியது முதலமைச்சர் கடமை.

அதை விட்டுவிட்டு, அமைச்சர் பதில் சொல்லுவார் என்கிறார். இது ஒரு சாதாரண கேள்வி. உங்கள் மடியில் கவனம் இல்லை என்றால் பதில் சொல்லிவிட்டு போங்க. மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு, இதில் தமிழ்நாடு பெயர் அடிபட்டுள்ளது. அதனால் விசாரணை நடத்த சொல்லி வருகிறோம். நீங்கள் விசாரணை நடத்துங்கள். யார் லஞ்சம் வாங்கி இருக்கிறார் என விசாரிக்க வேண்டியது உங்கள் கடமை.

அதனை விடுத்து, உங்களுக்கு வேலையில்லை என்பது என்ன பதில்? இதனை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலில் இதற்கு முதலமைச்சர் வருத்த தெரிவிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் தொண்டர்கள் உணர்வை கட்டுப்படுத்த முடியாது.” என அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்