தமிழ் நிலப்பரப்பும்… இரும்பின் காலமும்…, முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற முக்கிய அறிவிப்பபை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கோட்டூர்புறத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை நிகழ்வில் “இரும்பின் தொன்மை” எனும் நூலை வெளியிட்டார். அதன் பிறகு தான் நேற்று பதிவிட்டு இருந்த ‘அந்த’ முக்கிய அறிவிப்பை பற்றியும் கூறினார்.
அவர் கூறுகையில், ” தமிழ் பற்றி வெற்று பெருமை பேசுறாங்கனு என சிலர் பேசுனாங்க. அப்போது இருந்தே சங்க இலக்க வாழ்வியலை திராவிட மேடைகளில் நாம் பேசினோம். இலக்கியங்கள் படைத்தோம். சங்க தமிழை கலைஞரும் எடுத்துரைத்தார்.” எனக் கூறி, “இன்றைய நிகழ்வில் இரும்பின் தொன்மை குறித்து நாட்டுக்கு அறிவித்தல், இரும்பின் தொன்மை நூலை வெளியிடுதல், கீழடி மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களில் அமைய உள்ள அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையதளம் அறிமுகம் செய்தல், தமிழ் பண்பாட்டை உலகிற்கு எடுத்து சொல்லும் விழாவாகவும் இந்த விழாவை நடத்தி வருகிறோம்.” என பேசினார்.
மேலும், ” இந்த விழா மூலம் நான் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக கூறியிருந்தேன். அது என்ன என இப்போது வரை பலரும் என்னிடம் கேட்டனர் . ” எனக்கூறிவிட்டு, ” தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது பல்வேறு ஆய்வுப்பணி முடிவுகளை தற்போது அறிவிக்கிறேன்.” என அந்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன் பிறகு பேசுகையில், ” 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் மண்ணில் அறிமுகமாகிவிட்டது. கிமு 4 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே இரும்பு பயன்பாட்டுக்கு வந்தது என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதனால், 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு உள்ளது என நாம் உறுதியாக சொல்லலாம். இதனை ஆய்வு முடிவுகளாக நான் அறிவிக்கிறேன். ” என முதலமைச்சர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ” உலகின் தலைசிறந்த வெவ்வேறு தொல்லியல் துறை ஆய்வு நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் கிடைக்கபெற்ற தொல்பொருள் மாதிரிகளை அனுப்பினோம். புனே தொல் பொருள் ஆய்வு மையம், அகமதாபாத் ஆய்வு மையம், அமெரிக்கா புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வு மையங்களுக்கு ஒரே தாளியில் எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன . அதில் இருந்து ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. வெளிநாடு தொல்லியல் ஆய்வாளர்கள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் இரும்பின் காலம் குறித்த ஆய்வுகளை வெகுவாக பாராட்டியுள்ளனர்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.