ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு., 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்..,
இந்தியாவின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு தலைநகராக விளங்குகிறது. சர்வதேச நிறுவனங்களின் வாகனங்கள் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இங்கு அமைய உள்ள இந்த ஆலையில் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராணிப்பேட்டையில் அமையவுள்ள இந்த நிறுவனம் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, டாடா நிறுவன மூத்த தலைமை அதிகாரி சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய கார் உற்படுத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த நிகழ்வில் பேசுகையில், ” நாமக்கல் மாவட்டத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் பயின்று இன்றைக்கு உலகின் தலைசிறந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் சந்திரசேகரனை நினைத்து தமிழ்நாடே பெருமைகொள்கிறது. தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக உள்ளது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் தமிழ்நாடு தான் தலைநகரமாக உள்ளது .
ஃபோர்டு, ஹூண்டாய் போன்ற சர்வதேச நிறுவனங்களின் வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. டாடா போன்ற உலகளாவிய சர்வதேச சந்தையில் வாகனங்களை விற்பனை செய்யும் உற்பத்திநிறுவனங்களின் ஆலையும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. தமிழ்நாடு மீது டாடா குழுமம் வைத்துள்ள நம்பிக்கையை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்.
உலகில் உள்ள முக்கிய நிறுவனங்கள் பலவற்றுக்கும் தமிழ்நாடு தான் முகவரியாக இருக்கிறது. டாடா குழுமத்தைச் சேர்ந்த 15 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. டாடா குழுமம் தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகளை செய்ய வேண்டும். பொருளாதாரம் மட்டுமல்ல பெண்களுக்கு உரிமை வழங்குவதிலும் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார்.