கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடா? மு.க.ஸ்டாலின் ‘பளீச்’ பதில்!
கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப்பதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "உங்களில் ஒருவன்" நிகழ்வில் பேசியுள்ளார்.

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “உங்களில் ஒருவன்” நிகழ்வில் பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதில் தொகுப்பு வீடியோவாக அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில், மத்திய பட்ஜெட், கூட்டணி கட்சிகள், எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம், மக்கள் நல திட்டங்கள், பாலியல் குற்றங்கள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதில், கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்? அதில் முரண்கள் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப்பதில்லை என தெரிவித்தார்.
மேலும், ஒரு குடும்பத்தில், பணிபுரியும் அலுவலகத்தில், அனைத்து இடத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம்தான். 2019-இல் இருந்து ஒன்றாகச் சேர்ந்து தேர்தல் களத்தைச்சந்தித்துக் கொண்டு வருகிறோம். பா.ஜ.க.வை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருப்பது தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம், வேங்கைவயல் விவகாரம் என குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் கூட்டணி கட்சி தலைவர்களே ஆளும் திமுக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வெளிப்படையாகவே முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தான் இக்கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.