தீவிரமடையும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்., அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்.!
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் குறித்து அந்நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 90 சதவீத ஊழியர்கள் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஊதிய உயர்வு, தொழிலாளர்கள் தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம், 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தை குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிருத்தி கடந்த 25 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை கைவிடுமாறும், தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் இல்லை என்றும் சாம்சங் நிறுவனம் சார்பில் கூறப்பட்டலும் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் தீவிரமடையும் போராட்டத்திற்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊழியர்களின் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதன்படி, வரும் திங்களன்று, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் இணைந்து இந்த பிரச்சனை குறித்து நிறுவன உயர் அதிகாரிகளுடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.