3 புதிய படகுகள், திருவள்ளுவர் வாரம், திருவள்ளுவர் மாநாடு.. மு.க.ஸ்டாலினின் முக்கிய 7 அறிவிப்புகள்!
திருக்குறள் வாரம், 3 புதிய படகுகள், திருக்குறள் மாநாடு உள்ளிட்ட 7 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கன்னியாகுமரி : தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கு 3 நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். நேற்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அருகே உள்ள கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார். இன்று குமரியில் திருக்குறள் கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதலமைச்சர் அறிவித்த 7 அறிவிப்புகள் :
- குமரி முனையில் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும். முதல் படகிற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரும், இரண்டாவது படகிற்கு மார்ஷல் ஏ.நேசமணி பெயரும் , 3வது படகிற்கு ஜி.யு.போப் பெயரும் வைக்கப்படும்.
- திருக்குறளில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மாவட்டந்தோறும் ஆசிரியர்கள் மூலம் திருக்குறள் தொடர்பாக தொடர் பயிற்சி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ஒரு மாவட்டத்திற்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
- ஆண்டுக்கு, 133 உயர்கல்வி நிலையங்களில் திருக்குறள் தொடர்பான கலை சார்ந்த அறிவுசார் போட்டிகள், கருத்தரங்குகள் நடத்தப்படும்.
- ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கடைசி வாரம் திருக்குறள் வாரம் கொண்டாடப்படும்.
- தமிழ் திருக்குறள் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்காக ஆண்டுதோறும் திருக்குறள் மாநாடு நடத்தப்படும்.
- அரசு நிறுவனங்களில் பலகையில் குறள் எழுதி வைத்திருப்பது போல, தனியார் நிறுவனங்களிலும் குரல் எழுதி வைத்திருக்க ஊக்குவிக்கப்படும்.
- கன்னியாகுமரி பேரூராட்சியானது நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
என முக்கிய 7 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், திருவள்ளுவர் சிலை வெறும் சிலையல்ல , திருக்குறள் வெறும் நூலல்ல நாம் வாழும் கலை என குறிப்பிட்டு பேசினார்.