முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான ‘போன்சாய்’ விமர்சனம்.! சவுக்கு சங்கர் கூறியதன் அர்த்தம் என்ன.?
சவுக்கு சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 'போன்சாய் செடி' என விமர்சனம் செய்துள்ளார். போன்சாய் செடி என்பது வீட்டினுள் வளர்க்கப்படும் சிறிய மர வகையை சேர்ந்ததாகும்.
சென்னை : பெண்காவலர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் யூ-டியூபில் கருத்து தெரிவித்ததற்காக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. அவர் மீது கஞ்சா வைத்திருந்த வழக்கும் பதியப்பட்டது. இந்த வழக்குகளை அடுத்து சென்னை காவல் ஆணையர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தை பதிவுசெய்தார்.
இந்த குண்டர் சட்டமானது முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து, சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் வழக்கின் கீழ் மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த குண்டர் சட்டத்தை நீக்குவதற்காக சவுக்கு சங்கர் தயார் உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார்.
அந்த வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற விசாரணையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அவர் மீது வேறு வழக்குகள் நிலுவையில் இல்லையென்றால் அவரை ஜாமீனில் விடுதலை செய்யகோரியும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைசெய்தது.
3 எலும்பு முறிவு.,
இதனை அடுத்து நேற்று இரவு மதுரை மத்திய சிறையிலிருந்து சவுக்கு சங்கர் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியில் வந்தவுடனே செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேட்டியளித்தார் சவுக்கு சங்கர். அவர் கூறுகையில், “எனது உடலில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கையிலும் கூட எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. திமுக அரசுக்கு எதிராகப் என்னைப் பேசக்கூடாது என்று காவல்துறையினர் கூறினர். அரசுக்கு ஆதரவாக பேசினால் உடனடியாக விடுவிப்பதாகவும், அப்படி செய்யவில்லை என்றால் சிறையிலிருந்து விடமாட்டோம் என்றும் கூறினர். நான் உண்மையைப் பேசுவதற்கு பயப்பட மாட்டேன்.
போன்சாய் செடி :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தது இல்லை. அதற்கு அவர் பழகவில்லை. தந்தையின் நிழலில் வளர்ந்த “போன்சாய் செடி” போன்றவர்தான் முதல்வர் ஸ்டாலின். கருணை அடிப்படையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அரசைபற்றி எந்த உண்மையும் வெளியில் வந்துவிடக் கூடாது என்பதில் முதலமைச்சரும் அமைச்சர் உதயநிதியும் கவனமாக உள்ளனர். ” என்று சவுக்கு சங்கர் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி சவுக்கு சங்கர் “போன்சாய் செடி” என்று விமர்சனம் செய்துள்ளார். போன்சாய் என்பது ஓர் ஜப்பானிய சொல். இதன் பொருள் வீட்டினுள் வளர்க்கப்படும் ஓர் மரம் என்பதாகும். இந்த வகை சிறிய மரமானது வீட்டில் அலங்காரத்திற்கு வளர்ப்பதற்கு எதுவாக அரை அடி முதல் 3 அடி உயரம் வரை மட்டுமே வளர்ந்திருக்கும். இதுபோல தான் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வளர்ப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த விமர்சனங்களையும் எதிர்கொள்ளாமல் வளர்ந்துவிட்டார் என சவுக்கு சங்கர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மரணங்கள் :
சவுக்கு சங்கர் மேலும் கூறுகையில், ” கடந்த 2023 டிசம்பர் மாதமே, டிஜிபி சங்கர்ஜிவால், தமிழகத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் பயன்பாடு அதிகமாக புழக்கத்தில் உள்ளது என குறிப்பிட்டு முதலமைச்சருக்கு கடிதம் எழுதிவிட்டார். ஆனாலும் , முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் கள்ளக்குறிச்சியில் 66 பேர் உயிரிழந்துவிட்டனர். ” என குற்றம் சாட்டினார். இறுதியாக, ” எனது அலுவலகம் முடக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், ஏற்கெனவே இருந்த அதே வீரியத்துடன் மீண்டும் செயல்படுவேன்.” என நேற்று செய்தியாளர்களிடம் சவுக்கு சங்கர் பேட்டியளித்தார்.