கோவை அப்டேட்ஸ்.! தமிழ் புதல்வன்., 470 கோடியில் மேம்பாலம்., கலைஞர் சிலை.!
கோவை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவைக்கு பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைக்க உள்ளார். இதற்காக இன்று (ஆகஸ்ட் 9) காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வரவுள்ளார்.
புதுமை பெண் திட்டம் :
தமிழக முதலமைச்சர், அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் பயன்பெறும் வகையில் கடந்த 2022ஆம் ஆண்டில் தொடங்கிய ‘புதுமை பெண்’ திட்டத்தின் நீட்சியாக, இன்று ‘தமிழ் புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே புதுமை பெண் திட்டம் மூலம் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 3.28 லட்சம் மாணவிகள் பயன் பெறுகின்றனர்.
தமிழ்ப் புதல்வன் திட்டம் :
அதே போல இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டமானது 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் தமிழில் பயின்று மேற்படிப்புக்காக கல்லூரி செல்லும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் இன்று தொடங்கும் இத்திட்டம் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இதற்காக 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
470 கோடியில் மேம்பாலம் :
அதே போல , கோவை பிரதான பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே 470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. முடிவுற்ற இந்த மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு நெடுஞ்சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
மற்ற முக்கிய நிகழ்வுகள் :
அடுத்ததாக, கோவை செம்மொழி பூங்கா வளாகத்தில் புதியதாக அமைக்கப்படவுள்ள கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறை கட்டிடத்தை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
கலைஞர் சிலை :
அடுத்ததாக வ.உ.சி மைதானத்தில் 1 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள உணவு வீதி, புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டிடம் ஆகியவற்றை தொடங்கி வைத்துவிட்டு பின்னர் கணியூர் செல்கிறார். கணியூர் பகுதி நிகழ்ச்சியில் புதியதாக நிறுவப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
ட்ரோன்களுக்கு தடை :
மேற்கண்ட நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பிற்பகல் கோவையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி, கோவை பீளமேடு, ரேஸ்கோர்ஸ், உக்கடம் உள்ளிட்ட பிரதான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை பகுதி முழுவதும் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.