“வாழ்க வசவாளர்கள்., ” விஜயை விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின்.?
புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் அனிதா பயிற்சியகத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். Tally முடித்த 62 பெண்கள் மற்றும் 45 ஆண்களுக்கு சான்றிதழ் மற்றும் லேப்டாப், தையல் பயிற்சி பெற்ற 350 பெண்களுக்கு தையல் மிஷின், 2493 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி, புத்தாடைகள் ஆகியவை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மறைவுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு அனிதா பயிற்சியகம் கொளத்தூரில் தொடங்கப்பட்டது. அப்போது முதல் 12 பேட்ச் பெண்களும், 8 பேட்ச் ஆண்களும் Tally படித்து இலவச லேப்டாப் பெற்றுள்ளனர். இன்று 13வது பேட்ச் பெண்களும், 9வது பேட்ச் ஆண்களும் லேப்டாப் பயிற்சி பெற்றுள்ளனர். நல்ல திட்டங்களை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல் நமது அரசு அது முறையாக செயல்படுகிறதா என்பதையும் பார்த்து வருகிறது. ” என்று கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும், அவர் கூறுகையில், ” திமுக வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் தான், புதியதாக வருபவன் எல்லாம், புதுசு புதுசாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழியனும், ஒழியனும் என்ற அந்த நிலையில் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குறை சொல்பவர்கள் அரசின் செயல்பட்டை கவனிக்க வேண்டும்.
அவர்களுக்கெல்லாம் நாம் கூறிக்கொள்வது, ‘வாழ்க வசவாளர்கள்’ என அண்ணா கூறியதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
அண்மையில் புதியதாக கட்சி தொடங்கிய தவெக தலைவர் விஜய், கடந்த அக்டோபர் 27-ல் தனது கட்சி முதல் மாநாட்டை நடத்தினார். அப்போது திமுக பற்றி நேரடியாகவே பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.