“குரல்கள் நசுக்கப்படும்., ஜனநாயகத்திற்கு மதிப்பே இருக்காது!” மு.க.ஸ்டாலின் பரபரப்பு வீடியோ!  

ஏன் தொகுதி மறுசீரமைப்பு குறித்து திமுக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

TN CM MK Stalin say about Fair Delimitation

சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பில் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படும் என்றும், தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், ஒருவேளை அதிகப்படுத்தினால் வழக்கமாக விகித சராசரிப்படி தொகுதிகள் எண்ணிக்கை கிடைக்காது என்றும் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், பாஜக, நாம் தமிழர், தமாகா உள்ளிட்ட கட்சிகள் தவிர்த்து அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன. அந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அதன் படி, தமிழ்நாட்டை போல கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலத்தில் உள்ள பிரதான கட்சித் தலைவர்களுக்கு இது குறித்து ஆலோசிக்க நாளை (மார்ச் 22) ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். அதற்காக ஒவ்வொரு கட்சி தலைவர்களையும், முதலமைச்சர்களையும் ஒரு எம்பி, ஒரு அமைச்சர் கொண்ட குழுவினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக பல்வேறு மாநில கட்சி தலைவர்கள் தமிழகம் வரவுள்ளனர். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழகம வந்துவிட்டார்.

இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், அதுகுறித்து ஆளும் திமுக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் பேசிய வீடியோவில்..,

அதில் அவர் பேசுகையில், ” Fair Delimitation – திமுக ஏன் இதனை பேசுபொருளாக்கி உள்ளது என்றால், 2026-ல் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு நடத்தப்பட வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் இதனை செய்தால் தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் எம்பிகளின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும். இதை உணர்ந்து தான் நம் குரல் எழுப்பியுள்ளோம். இது எம்பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டும் கிடையாது. நம் மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை. அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினோம்.

இதில் பாஜக தவிர்த்து மற்ற அனைவரும் ஓரணியில் நின்று நியாமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என ஒரு தீர்மானம் எடுத்துக்கொண்டோம். அந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படக்கூடிய மற்ற மாநிலங்களை ஒருங்கிணைத்து போராட வேண்டும் என முடிவு எடுத்தோம். அந்த வகையில், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற பிரதிநித்துவம் கொண்ட ஒவ்வொரு கட்சிகளுக்கும், ஒரு எம்பி, ஒரு அமைச்சர் கொண்ட குழு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளது. எல்லா மாநில முதலமைச்சருக்கும் நான் போன் செய்து பேசினேன். சிலர் நேரடியாக வருவதாகவும், சிலர் பிரதிநிதிகளை அனுப்புவதாகவும் கூறினர்.

மார்ச் 22(நாளை) சென்னையில் ஏன் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்றால், தமிழ்நாடு போல நாம் அழைத்துள்ள மாநிலங்களும் பாதிக்கப்பட்டால் இந்திய நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்திற்கான மதிப்பே இருக்காது. நாடாளுமன்றத்தில் நமது குரல்கள் நசுக்கப்படும். நமது உரிமைகளை நிலைநாட்டமுடியாது. இது இந்த மாநிலங்களை அவமதிக்கும் செயல்.

எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சியில் பங்களித்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தண்டனை கொடுக்க கூடாது. அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளுடன் ஒருங்கிணைந்த சிந்தனைகளோடு, மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கும் இந்த கூட்டம் நடைபெற போகிறது. இந்த கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். நம்முடைய நியாயமாக கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும். நம்முடைய முன்னெடுப்பு இந்தியாவை காக்கும் என அந்த வீடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்