இந்திய வரலாறு தெற்கில் இருந்து தொடங்கும்.. முதலமைச்சர் பெருமிதம்.!

Tamilnadu CM MK Stalin

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் கீழடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சி பணிகளில் பல்வேறு பண்டையகால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. அப்படி கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்துப் பொறிப்புக்கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற்காலப்பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு உடைந்த நிலையில் புதிய கற்காலக் கருவி கண்டெடுக்கப்பட்டது. அதனையடுத்து, இடைக்கால வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாகக் கருதப்படும் இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழுமுனைக் கிடைக்கப்பெற்றது.

சென்னானூர் அகழாய்வில் 90 செ.மீ முதல் 108 செ.மீ வரையிலான ஆழத்தில் தமிழி எழுத்துப்பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாறைகளில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக் கல்வெட்டுகளில் வேள்ஊர், மதிரை, இவகுன்றம், நெல்வெளிஇய், இலஞ்சி, கருஊர், முசிறி, வெள்அறைய், தேனூர், அகழ்ஊர், கோகூர் போன்ற ஊர்ப்பெயர்கள் காணப்படுகின்றன. தற்பொழுது சென்னானூர் பானை ஓட்டில் ஊகூர் என்ற ஊர்ப் பெயர் கிடைக்கப்பெற்றுள்ளது சிறப்பானதாக கருதப்படுகிறது என விரிவாக தனது சமூக வலைதள பக்கத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிடுகையில், தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம் என குறிப்பிட்டு, மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள் – தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரைக் காசு, சிவப்பு வண்ணக் கொள்கலன், தமிழி பானை ஓடு, இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழுமுனை, தக்களி, தந்தத்தாலான பகடைக்காய், சுடுமண் சிற்பம், உணவுக் கிண்ணம், செம்பினாலான அஞ்சனக்கோல் – ஆணி என இப்படித் தொடர்ந்து அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள், தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிவியல் சான்றுகளுடன் உலகுக்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம் சரியான திசையில் செல்வதை உறுதிசெய்கிறது என பதிவிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம் என குறிப்பிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்