“இபிஎஸ்-க்கு என் அன்பான வேண்டுகோள்!” முதலமைச்சரின் ‘முக்கிய’ கோரிக்கை!
இபிஎஸ் டெல்லிக்கு பயணம் செய்யும் போது அவர் சந்திக்கும் நபரிடம் நாம் முன்வைக்கும் இருமொழி கொள்கை பற்றி கூறுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதி குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு துறை ரீதியிலான அமைச்சர்கள் பதில் அளித்தும் வருகின்றனர்.
இந்த கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் இதே வேளையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் அதிமுக சார்பாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை பார்வையிட சென்றுள்ளார் என அதிமுகவினர் கூறினாலும் , அங்கு முக்கிய அரசியல் தலைவர்களை இபிஎஸ் சந்திக்க சென்றுள்ளார் என்றும், 2026 தேர்தல் கூட்டணி குறித்த ஆலோசனையாக இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த திடீர் டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனது கோரிக்கையை ‘அரசியல்’ நகைச்சுவையாக முன்வைத்துள்ளார். மும்மொழி கொள்கையானது தமிழ்நாட்டில் எப்போதும் நிறைவேற்றம் செய்யப்பட மாட்டாது. நிதி தரவில்லை என இனமானத்தை அடமானம் வைக்கும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல. இது பண பிரச்சனை அல்ல இன பிரச்சனை என பேசியிருந்தார்.
அப்போது, ” எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றுள்ளார் என்ற தகவல் கிடைத்தது. அதே போல அங்கு யாரை சந்திக்க போகிறார் என்ற தகவலும் கிடைத்தது. அப்படி சென்றுள்ள அதிமுகவினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இங்குள்ள எதிர்க்கட்சி துணைத்தலைவர் கூறினார், என்றைக்கும் இருமொழி கொள்கைக்கு ஆதரவாக இருப்போம் என்று. இன்று காலையில் டெல்லிக்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி யாரை சந்திக்க உள்ளாரோ அவரிடம் இதனை பற்றி கூறுங்கள்.” என அரசியல் நகைச்சுவையாக தனது கோரிக்கையை முன்வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.