இனி ‘காலனி’ என்ற சொல் கிடையாது! முதலமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு!
தமிழ்நாட்டில் இனி காலனி என்ற சொல் அரசு ஆவணங்கள், மக்கள் புழக்கம் என அனைத்தில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து வருகிறார். அப்போது உறுப்பினர்களின் கேள்வியை குறிப்பிட்டு அதற்கான பதிலை முதலமைச்சர் கூறி வந்தார்.
அதில், விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன் எழுப்பிய கேள்வி குறித்து பேசினார். முதலமைச்சர் பேசுகையில், ” உறுப்பினர் சிந்தனை செல்வன் மற்றும் விசிக கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வைத்த கோரிக்கையான, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அரசுவேலை வழங்களில் இடஒதுக்கீடு கோரி கடிதம் அளித்து இருக்கிறார்கள். நேரிலும் இதுகுறித்த கோரிக்கையை அவர்கள் முன்வைத்தார்கள். ” எனக் கூறினார்.
அதில் , ” அரசு பணியாளர் தரவாரிசை பட்டியல் முதலில் சமூக நீதி அடிப்படையில் இடஒதுக்கீடு வாரியாக குறிப்பிடப்பட்டு வந்தது. அது, 2019 உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து மாற்றம் கண்டது. இதன் காரணமாக ஏற்பட்ட விளைவுகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்படும். இந்த குழு தீர்ப்பின் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். அதன் பிறகு சட்ட ரீதியிலான நடவடியாகி எடுக்கப்படும். ” எனக் கூறிய முதலமைச்சர், அடுத்து ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், இந்த மண்ணின் பூர்வகுடிகளான ஆதிகுடியினரை இழிவுபடுத்தும் விதமாக ‘காலனி’ என்ற சொல் பதிவாகி இருக்கிறது. இது ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமை குறியீடாகவும், வசை சொல்லாகவும் மாறியுள்ள நிலையில், அந்த சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்குவதற்கு என்ன நடவடிக்கை வேண்டுமோ அது எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.