புத்தக காட்சித் திருவிழா : “1,125 புத்தகங்கள் மொழிபெயர்ப்பு..” மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சியில் மொழிபெயர்ப்பு தொடர்பாக 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை அமைச்சர்கள் அன்பில் மகேஷ், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா என 65 நாடுகளை சேர்ந்த பதிப்பார்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று இறுதி நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். முதலமைச்சர் முன்னிலையில், சர்வதேச புத்தகக் காட்சியில் மொழிபெயர்ப்பு தொடர்பாக 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில், 1,005 ஒப்பந்தங்கள் தமிழ் புத்தகங்களை வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கும், 120 ஒப்பந்தங்கள் வெளிநாட்டு மொழி புத்தகங்களை தமிழில் மொழி பெயர்ப்பதற்கும் ஆனவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், உலகை தமிழ் மொழிக்கு கொண்டுவருவதும், தமிழை மற்ற உலக மொழிக்கு எடுத்துச் செல்லவும் இந்தியாவில் இது போன்ற ஒரு புதிய முயற்சியாகும். இதன் மூலம் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை புதிய மைல்கற்களை அமைத்துள்ளது.
2023-ல் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் தொடங்கி, 2024-ல் 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இப்போது சர்வதேச புத்தக காட்சி 2025-ல் 1,125ஐ எட்டியுள்ளது. நமது திராவிட மாதிரி அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழ் இலக்கியத்தின் இந்த சாதனை மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை தமிழ் அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். நம் எழுத்தாளர்கள் இந்த புகழை மட்டுமல்ல நோபலையும் வெல்வதை நோக்கமாகக் கொள்வோம்!
இந்த சிறந்த சாதனைக்காக அமைச்சர் அன்பில்_மகேஷ் மற்றும் அவரது அமைச்சர் குழுவுக்கும் வாழ்த்துக்கள்” என முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.