கலவரத்தை ஏற்படுத்த அதிமுக முயற்சி.. சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம்.!

ADMK MLAs - Tamilnadu CM MK Stalin

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நாளிலும், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். நேற்று போல இன்றும் கருப்புச்சட்டையுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர். அப்போது துறைரீதியிலான கேள்வி நேரம் ஆரம்பிக்கும் முன்னரே கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரினர்.

ஆனால், கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதம் நடத்தலாம் என சபாநாயகர் அப்பாவு கூறினார். இருந்தும் தற்போது விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும், விஷச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர்.

இதனை அடுத்து, எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு, அதிமுகவினர் அமளியில் ஈடுப்பட்டது.  அதிமுகவினர் சட்டப்பேரவையில் பேசியது அவைகுறிப்பில் இடம்பெறாது என்றும், சட்டமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படுகிறார்கள் என்றும் அதனால், இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் அதிமுக கலந்து கொள்ள கூடாது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

அதிமுவினர் அமளி குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 40க்கு 40 வெற்றிபெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அதிமுக அமளியில் ஈடுபடுகிறது.   அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தை தவறு என்று சொல்லவில்லை. போராட்டம் அனைவரது உரிமை.  ஆனால், விஷச்சாராய விவகாரத்தில் சட்டப்பேரவையில் தேவையற்ற பிரச்னையை அதிமுக எழுப்புகிறது. திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக முயற்சி செய்கிறது.

கேள்வி நேரம் முடிந்து விவாதம் தொடரலாம் என்று சபாநாயகர் கூறியும் அதிமுக தொடர் அமளியில் ஈடுபட்டது. விஷச்சாராய விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. சம்பவம் நடைபெற்ற 24 மணிநேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்