தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…
தமிழ்நாடு காவல்துறைக்கு தமிழக அரசு மேற்கொண்டுவரும் திட்டங்கள் குறித்து முதலமைசர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார். அதன் பிறகு அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் காவல்துறை சார்ந்த அரசு முன்னெடுத்த நடவடிககைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.எஸ்.மணியன் எழுப்பிய கேள்விகளுக்கு நாளை நான் விரிவான விளக்கம் அளிக்கிறேன் எனக் கூறினார். இன்று இதுவரையில் தமிழக அரசு காவல்துறையினருக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து சிறு பட்டியலை கூறுவதாக தெரிவித்தார். அப்போது திமுக அரசில் தான் காவல்துறைக்கு பல்வேறு நலதிட்டங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு முதலமைச்சர் பேசியதில்..,
- காவலர் சேமிப்பு நிதியில் இருந்து உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் காவலர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயிரிழந்தால் வழங்கப்படும் நிதியுதவி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- காவலர்களின் பிள்ளைகளில் 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் 10 ரேங்க் எடுக்கும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்படும். முதல் ரேங்க் எடுக்கும் மாணவருக்கு உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரம் வழங்கப்படும். 2ஆம் இடம் பிடிக்கும் மாணவருக்கு உதவித்தொகை ரூ.4.5 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். 3ஆம் பிடிக்கும் மாணவருக்கு உதவிதொகை ரூ.2.5 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், 4ஆம் இடம் முதல் 10ஆம் இடம் வரையில் பிடிக்கும் மாணவர்களுக்கு உதவி தொகை 2 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.4 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
- அதேபோல, 12ஆம் வகுப்பில் முதல் ரேங்க் பரிசுத்தொகை ரூ. 7.5 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும், 2ஆம் இடத்திற்கு ரூ.6.5 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரமாகவும், 3ஆம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.3.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும், 4ஆம் இடம் முதல் 10ஆம் இடம் வரையில் உள்ளவர்களுக்கு ரூ.2.5 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
- காவலர்களின் பிள்ளைகளில் முதல் 100 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி உதவிதொகை ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அது 100 மாணவர்களில் இருந்து 200 மாணவர்கள் வரையில் விரிவு படுத்தப்படுகிறது. மேலும் உதவி தொகை ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- காவலர்களோ அல்லது அவர்களின் பிள்ளைகளோ கொலை செய்யப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது.
- காவலர்கள் பணியில் உயிரிழந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- மருத்துவகாப்பீடு காவலர்களின் மனைவி மற்றும் பெண் போலீஸ் வரையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- போலீஸ் உணவு சலுகைகள் ஊர்காவல் படையினர் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- கைதியாக இருந்த காவலர்கள் சுமார் 2 ஆயிரம் பேருக்கு சிறை தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.
- ஆய்வாளர் இடர்படி ரூ.800-ல் இருந்து ரூ.1000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிஎஸ்பி வரையிலான பதவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
- தலைமை காவலர்களுக்கு வாரத்தில் 1 விடுமுறை, சிறப்பு காவலர் ஆய்வாளருக்கு 15 நாட்களுக்கு ஒருநாள் விடுமுறை, அனைத்து காவலர்களுக்கும் வார விடுமுறை
மேற்கண்ட காவலர் நலன் சார்ந்த திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார் .