கனமழை பாதிப்பு.! ரேஷன் கார்டுக்கு ரூ.6000 நிவாரணம்.! முதல்வர் அறிவிப்பு.!

Tamilnadu CM MK Stalin announce South TN Rains

கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மழைநீரால் சூழ்ந்தன. அங்குள்ள மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. தற்போதும் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் முழுவதும் வடியாமல் உள்ளது. அதனை வெளியேற்றும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் வருகை :

இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட வந்திருந்தார். முதலில் தூத்துக்குடி வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து மக்களிடம் நிவாரண முகாம்களில் இருந்த மக்களிடம் குறைகளை கேட்டிருந்தார். அதன் பின்பு அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

இதனை தொடர்ந்து திருநெல்வேலிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கும் வெள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். இதனை முடித்து பின்னர் திருநெல்வேலி வர்த்தகம் மையத்தில் செய்தியாளர்கள் முன் நிவாரண உதவிகள் குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மையம் :

அவர் கூறுகையில், சென்னையை பெரு வெள்ளத்திலிருந்து பாதுகாத்தது போல, தென்தமிழகத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களையும் தமிழக அரசு காக்கும். கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையமானது 17ஆம் தேதி தான் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கைவிடுத்த மழை அளவை விட பல மடங்கு அதிக அளவு மழை பெய்தது.

வரலாறு காணாத மழை  :

இதுவரை வரலாறு காணாத அளவுக்கு மழையானது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 94 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளைக்காடாய் காட்சியளிக்கிறது. ஒரு ஆண்டில் செய்ய வேண்டிய மழையானது ஒரு நாளில் பெய்தது. 1870ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவு மழை இந்த ஆண்டு பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி என பலவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மீட்புப்படை வீரர்கள் :

வானிலை ஆய்வு மையம் தாமதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அறிவிப்பை கொடுத்தாலும், தமிழக அரசு அதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டது. மழை பெய்தவுடன் 10 அமைச்சர்கள் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நிவாரண பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர். காவல் மீட்பு படையினர் அருகில் உள்ள மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள், 375 தமிழக பேரிடர் படையினர் கொண்ட 15 குழுக்கள், 275 வீரர்கள் கொண்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் களத்தில் உள்ளனர். மேலும், பயிற்சி பெற்ற 230 மீட்பு படை வீரர்கள் களத்தில் இருக்கின்றனர். இதுபோக 128 ராணுவ வீரர்களும் மீட்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

ரூ.2000 கோடி :

இதுவரை 12,653 பேர் மீட்கப்பட்டு 143 முலாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்தும் அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்தும் பலமுறை கேட்டறிந்து கொண்டேன். மேலும், மத்திய அரசு தொடர்பு கொண்டு உடனடியாக தென் மாவட்டத்தில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள ரூ.2000 கோடி கேட்டுள்ளேன் என அந்த உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதனை அடுத்து நிவாரண உதவிகள் தொடர்பான விவரங்களை முதல்வர் குறிப்பிட்டார்.

நிவாரணத் தொகை விவரங்கள் : 

  • மழையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்.
  • சேதமடைந்த குடிசைக்கு தலா ரூ.10,000/-
  • 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000/-
  • 33 சதவீதத்திற்கும் மேல் சேதமடைந்து மரங்கள் ஹெக்டேருக்கு ரூ.22,000/-
  • மானாவரி பயிர்களுக்கு ரூ.8,500/-
  • எருது, பசு உயிரிழப்புக்கு ரூ.37,500/-
  • வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு ரூ.4000/-
  • கட்டுமரம், மீன் பிடி படகு (சிறியது) முழுதும் சேதம் அடைந்திருந்தால் ரூ.50,000/-
  • பகுதி சேதமடைந்த கட்டு மரங்களுக்கு ரூ.15,000/-
  • முழுதாக சேதமடைந்த வல்லத்திற்கு ரூ.1,00,000/-
  • முழுதாக சேதமடைந்த இயந்திர படகுக்கு ரூ.7,50,000/-
  • பகுதி சேதம் அடைந்த இயந்திர படகுக்கு ரூ.15,000/-
  • தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வட்டங்களில் குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ. 6000/-
  • திருநெல்வேலி, தூத்துக்குடி மற்ற வட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தாலா ரூ.1000/-

என நிவாரணத் தொகை அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில், நெல்லையில் அறிவித்தார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்