“அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இதயப்பூர்வ நன்றிகள்!” முதலமைச்சர் நெகிழ்ச்சி!
தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் உரையாற்றியுள்ளார்.

சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய பாஜக அரசு முயல்கிறது என்றும், இதன் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என்றும், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனை பொருட்டு தமிழக அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினர். மேலும், கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் 7 மாநிலங்களை ஒன்றிணைத்து திமுக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியது. இதில் கேரளா, பஞ்சாப், தெலுங்கானா முதலமைச்சர்கள், கர்நாடகா துணை முதலமைச்சர், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் உரை :
இந்த நிகழ்வுகள் குறித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் கூறுகையில், ” 2026-ல் மத்திய அரசு மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநித்துவ உரிமை பாதிக்கப்பட கூடாது என முன்கூட்டியே எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில், கடந்த 14.02.2024-ல் தீர்மானம் நிறைவேற்றம் செய்யபட்டது.
அதனை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட கட்சிகளை ஒன்றிணைத்து கடந்த 02.03.2025 அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை கடுமையாக எதிர்த்தும், தற்போது இருக்கும் தொகுதி எண்ணிக்கையை அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றாமல் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டுக்குழு முதல் கூட்டம் :
நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையில் 1971ஆம் ஆண்டு இரு அவைகளில் எந்தெந்த விகிதத்தில் தற்போது இருக்கிறதோ, அதே விகித எண்ணிக்கையில் உயர்த்த அரசியல் சட்டத்தை இயற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியும், நியாயமான உரிமையை மீட்கவும், நியாயமான கோரிக்கைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடந்த 22.3.2025-ல் கூட்டுக்குழு முதல் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டுக்குழு கூட்டத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நேரிலும், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொளி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.
மாநிலங்களை தண்டிக்க கூடாது
இந்த கூட்டுக்குழு கூட்டத்தில் தொகுதி மறுவரையறையில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும், தற்போதுள்ள தொகுதி எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும், மக்கள் தொகை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய மாநிலங்களை தண்டிக்கப்பட கூடாது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.
பங்கேற்ற அரசியல் தலைவர்கள் தங்கள் சட்டமன்றங்களில் தொகுதி மறுவரையறை குறித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்ய வேண்டும். மேலும், கூட்டுக் குழு சார்பில் பிரதமரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என்றும் இந்த முதல் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுக்குழு ஆலோசனை கூட்டம் பற்றி தெரிவித்தார்..
நன்றி :
மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாடு முன்னெடுத்த கூட்டுக்குழு நடவடிக்கை தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி மறுவரையறை குறித்த நடவடிக்கைக்கு துணை நின்ற அதிமுக உள்ளிட்ட அனைத்துகட்சிகளுக்கும் என் இதயப்பூர்வமான நன்றி. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். ” என தனது நன்றியையும் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.