விஷச்சாராய விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள்… முதல்வர் விளக்கம்.!
சென்னை: இன்று தமிழக சட்டப்பேரவையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கவனஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டுவந்தனர். இந்த கவனஈர்ப்பு தீர்மானங்கள் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது உரையாற்றினார். அதில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு நான் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விஷச்சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப் பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தை பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.
விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாத பராமரிப்புத் தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவை தமிழக அரசே ஏற்கும். பெற்றோரை இழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்ச ரூபாய் வைப்புநிதித் தொகை வழங்கப்படும்” எனவும் கவனஈர்ப்பு தீர்மானத்தில் தமிழக முதல்வர் மு,க.ஸ்டாலின் பேரவையில் உரையாற்றினார்.