இனி பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்… முதல்வர் புதிய திட்டம்.!
தமிழகத்தில் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் முறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய வலைத்தளத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு நிதித்துறை சார்பில் இன்று வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு தொடக்க நிதியை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். மேலும், தமிழ்நாட்டில் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை அனைவரும் எளிதில் அறியும் வகையில் ஓர் வலைதள பக்கம் ஒன்றையும் இன்று முதல்வர் அறிமுகப்படுத்தி உள்ளார். இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இந்த நிகழ்வில் ஐந்து சிறிய நிறுவனங்களுக்கு முதலீடு வழங்கும் நிகழ்வையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உள்ளார். இந்த நிகழ்வில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் புதிதாக தொழில் தொடங்க ஏதுவாக அவர்களுக்கான தொடக்க நிதி அளிக்கும் ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார். சிறு குறு நடுத்தர புத்தொழில் திட்டம் மூலமாக 7 கோடியே ஐம்பது லட்சம் ரூபாய்க்கு பங்கு முதலீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.
முதலமைச்சர் இன்று தொடங்கியுள்ள வலைதள பக்கமான ( www.ccfms.tn.gov.in )பொதுத்துறை நிறுவனங்களை கண்காணிக்கும் அந்த இணையதள பக்கத்தில் தமிழ்நாட்டில் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள், அதன் பங்குகள் அதற்கான தமிழக அரசின் முதலீடுகள், வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகள் குறித்த அத்தனை விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அனைவரும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.