#BREAKING: 14 பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டம் உட்பட 5 திட்டங்களை துவங்கி வைத்த முதல்வர்..!

தலைமைச் செயலகத்தில் 5 வகையான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி தலைமைச் செயலகத்தில் 5 வகையான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கக்கூடிய திட்டத்தை 10 பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்திருக்கிறார். 14 பொருட்கள் தொகுப்பு அடங்கிய பையில் கோதுமை மாவு ஒரு கிலோ, உப்பு ஒரு கிலோ, சர்க்கரை அரை கிலோ, உளுத்தம் பருப்பு 500 கிராம், புளி 250 கிராம் ,கடலை பருப்பு 250 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகு 100 கிராம் உள்ளிட்ட 14 பொருட்களில் இடம்பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து கொரோனா நோய்க்கு நிவாரணமாக அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட இரண்டாவது தவணையாக ரூ.2000 வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். வரும் 5-ஆம் தேதி ரேஷன் கடைகளில் இரண்டாவது தவணையாக ரூ.2000 பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் நோயால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் நோயால் உயிரிழந்த முன் களப்பணியாளர்களான மருத்துவர், காவலர் ஆகியோரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஒரு கால பூஜையுடன் செயல்படக்கூடிய கோயில்களில் சம்பளமின்றி பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி ,15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார்.