“முதல்வரே…இதில் தலையிடுங்கள்;உரிய இழப்பீடு வழங்குங்கள்” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

Default Image

சென்னை:மழை வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்புக்கு ஆளும் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி,அவர்களது மறுவாழ்விற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“வட கிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததன் உட்பட்ட காரணமாக அப்பகுதியே ஒரு தீவு போல் காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆளும் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையே என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அண்மையில் பெய்த அதிகன மழை காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோடு, சாத்தனூர் அணையும் நிரம்பி, அதிலிருந்த உபரி நீர் தென் பெண்ணையாற்றில் கலந்ததன் காரணமாக கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு, செம்மண்டலம் உள்ளிட்ட பல கிராமங்களில் தண்ணீர் புகுந்ததாகவும், பண்ருட்டியில் இருந்து கடலூர் வரை ஆற்றங்கரையோரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட
பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 22 செ.மீ. மழை பெய்த நிலையில் தளவானூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததாகவும், பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முத்தாம்பாளையம், அய்யங்கோவில்பட்டு, கொய்யத்தோப்பு கிராமங்களும் தண்ணீரில் மூழ்கியதாகவும்,

ஒரு வாரத்திற்கு முன்பாக 10,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் தென் பெண்ணையாற்றிலிருந்து ஒன்றே கால் இலட்சம் கன அடி தண்ணீர், அதாவது பன்னிரெண்டு மடங்கிற்கும் மேலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது தான் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதற்குக் காரணம் என்றும், இந்த அளவிற்கு வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்ற தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும், முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் தங்களுடைய உடைமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்றும், பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் சரிவர செய்யாததன் காரணமாக மிகுந்த பரிதவிப்பிற்கு அப்பகுதி மக்கள் ஆளாக்கப்பட்டதாகவும், இரண்டு நாட்களாக தண்ணீர் வடியாத நிலையில் மின்சாரம் மற்றும் குடிநீர் இன்றி தவிப்பதாகவும், ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும்,ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாக இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து வரும் தகவல்களின் அடிப்படையிலும், பத்திரிகைகளில் வரும் செய்திகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தற்போது தங்க வைக்கப்பட்டிருந்தாதலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு, வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்த மக்களுக்கான உரிய இழப்பீடு, கால்நடைகளை இழந்தவர்களுக்கான உரிய இழப்பீடு மற்றும் அவர்களின் மறுவாழ்விற்குத் தேவையான உதவி ஆகியவற்றை செய்து தருவது ஓர் அரசாங்கத்தினுடைய கடமை.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி அவர்களது மறுவாழ்விற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்