காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு மாற்று வழி இல்லை!
முதலமைச்சர் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் திட்டம் எனக் குறிப்பிட்டிருப்பது காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு தான் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு மாற்று வழி இல்லை எனவும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் ஆணைகளை செயல்படுத்துவதற்கு ஒரு திட்டத்தை ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள திட்டம் என்னவென்பது, 1956ஆம் ஆண்டைய பன்மாநில நதிநீர் தாவா சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, திட்டம் என்பது, நடுவர் மன்ற இறுதி ஆணையையும், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் செயல்படுத்த ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அந்த அமைப்பின் உறுப்பினர்கள், அதிகார வரம்புகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியன வரையறுக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில், நீர்ப் பங்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டதைத் தவிர, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர இனங்களில் மாற்றம் ஏதும் தேவையில்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கண்ட தீர்ப்பின்படி, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட திட்டம் என்பது, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு தான் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்புகள் அதிகார வரம்புகளுடன் அமைக்கப்பட வேண்டும் என்று காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் தெளிவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, காவேரி மேலாண்மை வாரியத்தை, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு மாற்று வழி இல்லை என நேற்றைய டெல்லி கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, உச்ச நீதிதின்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். காவிரி நதிநீர் பிரச்சனையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்கும் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.