மெரினாவில் கலைஞர் நினைவிடம்.. விழாவாக நடைபெறவில்லை.! – முதல்வர் முக்கிய அறிவிப்பு.!
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரானது இன்று பிப்ரவரி 22ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. கடந்த பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் மற்றும் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான விவாதம் நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது.
இன்று கடைசி நாள் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் பற்றி முக்கிய அறிவிப்பை கூறினார்.
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!
அதில், கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று உள்ளன. அதேபோல் அறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் வருகிற பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்த நிகழ்ச்சி குறித்து அழைப்பிதழ் அச்சிடவில்லை, இதனை விழாவாக நாங்கள் கொண்டாட விரும்பவில்லை. மாறாக நிகழ்ச்சியாக மட்டுமே நடத்த விரும்புகிறோம். அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கூட்டணி கட்சி உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். இதனை மக்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.