முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு ! நீங்கள் இருவரும் இரு கண்கள்…..

Published by
Venu

ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும்  காவல் அதிகாரிகளும்,ஆட்சியரும் தான் பொறுப்பு. இரு துருவங்கள் போல் இல்லாமல், நீங்கள் இருவரும் இரு கண்களைப் போல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆட்சியர் காவலர் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

“சட்டம் ஒழுங்கை திறமையாகப் பராமரித்தல், பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை வெளிப்படையாகவும், திறமையாகவும், விரைவாகவும் அளித்தல், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், புதிய உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக உருவாக்குதல், “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லுதல் ஆகியவை இம்மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் துறை அதிகாரிகளாகிய நீங்கள், அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் நலனுக்காக திட்டங்களைச் செயல்படுத்தி, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பாலமாகவும், மக்கள் சேவகர்களாகவும் செயல்படவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்ட ஆட்சித்தலைவர்களும், காவல் துறை அதிகாரிகளும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதன் மூலம் தான், மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்திட இயலும். மேலும், மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல்துறை அதிகாரிகளும்தான் பொறுப்பு. ஆனால், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தாங்கள் வளர்ச்சிப் பணிகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும்தான் பொறுப்பு என்று நினைத்துச் செயல்பட்டாலும், காவல்துறை கண்காணிப்பாளர்கள், சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெரிவிக்காமல் தன்னுடைய பொறுப்பு மட்டுமே என எண்ணிச் செயல்பட்டாலும், பாதிக்கப்படுவது மாவட்டத்தின் சட்ட ஒழுங்கே.

இரு துருவங்கள் போல் இல்லாமல், நீங்கள் இருவரும் இரு கண்களைப் போல் ஒருங்கிணைந்து செயல்பட்டால், சட்டம் ஒழுங்கை மேலும் சிறப்பாகப் பேணிக்காக்க இயலும். சட்டம் ஒழுங்கை சரிவர பராமரிக்க, கிராம மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள காவல்துறை மற்றும் வருவாய் அலுவலர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை முன்கூட்டியே ஒற்று அறிந்து, தங்களுடைய உயரதிகாரிகளுக்கு உடனுக்குடன் அத்தகவல்களை தெரிவிப்பதை தங்களுடைய முக்கியப் பணியாக கருத வேண்டும்.

“முளையிலேயே கிள்ளி எறிவது” என்ற பழமொழிக்கு ஏற்ப, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் முன் அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதமும், மதவாதமும், இடதுசாரி தீவிரவாதமும் சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இச்சவால்களை திறம்பட எதிர்கொள்ள, நமது புலனாய்வு அமைப்புகளை பலப்படுத்தி, பயங்கரவாத அமைப்புகள் உருவாகாமல் தடுத்து, ஆரம்ப நிலையிலேயே களை எடுக்க வேண்டும்.

அழிவு சக்திகளை கட்டுப்படுத்தி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் அனைவரும் செயல்படவேண்டும். அவ்வாறு நீங்கள் செயல்பட்டு, நமது மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக விளங்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.

தேசிய பாதுகாப்புக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும்.

சாதி மோதல்கள் ஏற்படக்கூடிய பதட்டமான பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும், தங்களுடைய கண்காணிப்பு வளையத்திற்குள் எப்போதும் வைத்திருக்க வேண்டும். உங்களுடைய வாராந்திர சட்ட ஒழுங்கு கூட்டத்தில் இதனை முக்கிய விவாதப் பொருளாகக் கொண்டு, விவாதிக்க வேண்டும்.

நல்லிணக்க கூட்டங்களை அவ்வப்போது நடத்த வேண்டும். சாதி எனும் கொடிய தீயினை தூண்டிவிட்டு, குளிர்காய நினைக்கும் சமூக விரோத கும்பல்களைக் கண்டறிந்து, வேற்றுமைகளைக் களைந்து, சமூக ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.

வழிப்பறிக் கொள்ளை, நகைப் பறிப்பு ஆகிய குற்றச் செயல்களை வளரவிடாமல் தடுப்பதற்கு காவல்துறையினர் ரோந்துப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும். மக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் கண்காணிப்புப் பணிகளை அதாவது விசிபல்போலீசிங்-ஐ (VISIBLEPOLICING), காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கும், நடைபெறும் குற்றங்களில் குற்றவாளிகளைப் பிடிக்க விரைந்து செயல்படுவதற்கும் உதவும் வகையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், ஆங்காங்கே கண்காணிப்பு காமராக்களை நிறுவியும் பணியாற்றி குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும்.

முன்விரோதம் மற்றும் தொழில் தகராறு காரணமாக மர்ம நபர்களால் நடத்தப்படும் படு கொலை சம்பவங்களை ஒடுக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இளைஞர்களிடையே தற்போது புதிதாக தலையெடுத்துள்ள கத்தி போன்ற ஆயுதங்களைப் பொது இடங்களில் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தும் கலாச்சாரத்தினை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நகரங்களில், முக்கிய சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்கு ஆங்காங்கே போக்குவரத்துக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பணியில் சிரத்தையுடன் ஈடுபடுவதை உறுதி செய்ய காவல் துறை உயர் அலுவலர்கள் அவ்வப்போது மேற்பார்வை செய்தல் அவசியம். மேலும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியார் பங்களிப்புடன் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும்.

சாலை விபத்துகள் தனி மனித வாழ்வில் பெரும் துயரத்தையும், பேரிழப்பையும் ஏற்படுத்துகின்றன. அவற்றைத் தடுக்க, அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை இனம் கண்டறிந்து, அவ்விடங்களில் சாலைகளை சீரமைத்தோ, தடுப்பு வேலிகள் அமைத்தோ, வாகனத்தின் வேகத்தைக் குறைக்கத் தேவையான எச்சரிக்கை பலகைகளை அமைத்தோ, மேலும் ஒரு விபத்து கூட அவ்விடத்தில் ஏற்படாமல் தடுக்க, முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். காவல்துறையின் ரோந்துப் பணிகளுக்காக அதிக அளவில் வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கந்துவட்டி சம்பந்தமாக பெறப்படும் புகார்கள் மீது, தற்பொழுது அமலில் உள்ள “தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடைச் சட்டம், 2003”ன்படி உரிய நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

ஒரு நம்பர் லாட்டரி, இணைய தளம் வாயிலாக நடைபெறும் சூதாட்டங்கள், குட்கா விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை போன்றவை பொதுமக்களை, குறிப்பாக எதிர்கால சந்ததியினரைப் பெரிதும் பாதிக்கும் என்பதை உணர்ந்து இவற்றைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை தொடர வேண்டும்.

மேலும், இம்மாதிரியான குற்றங்கள் ஏதும் உங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடப்பதாகத் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலுள்ள காவலர்களை பொறுப்பாக்கி, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளாதாரக் குற்றங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள், சாதிய ஆணவக் கொலைகள் போன்ற குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக வரும் புகார்கள் மீது, காலம் தாழ்த்தாமல் வழக்குகள் பதிவு செய்து, உரிய தொடர் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலனில் தமிழக அரசு எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அவர்களின் மீதான வன் கொடுமை புகார்களைப் பதிவு செய்து, அச்சட்டத்தின்படி பாரபட்சமின்றி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்தியாவின் உள் மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பில் கடலோர பாதுகாப்பு முக்கிய பங்கெடுக்கின்றது என்றால் அது மிகையாகாது. கடலோரப் பாதுகாப்பு படை, கடலோர காவல் படை மற்றும் கடலோர கிராம வருவாய் நிர்வாகத்தின் கூட்டு முயற்சி, நம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம் என்பதை மனதில் நிறுத்தி, கடலோர மாவட்டங்களில் பணி புரியும் அலுவலர்கள் இந்நேர்வில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

வெடிபொருட்களின் சட்ட விரோத பயன்பாடு சமூகத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், இம்மாதிரியான பொருட்களின் பயன்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை முழுவதுமாக கட்டுப்படுத்திட வேண்டும். வெடிபொருள் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் வெடிபொருள் தயாரிக்கும் இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடவடிக்கைகளின் மூலம் இதனை உறுதி செய்ய வேண்டும்.

கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டினை தடுப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. எனவே, இவற்றினை முற்றிலுமாக களைய தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

திருக்கோயில்களில் நடைபெற்ற தீ விபத்து போன்ற நிகழ்வுகளினால் பொதுமக்களின் மனதில் எவ்வித ஐயப்பாடும் ஏற்படாவண்ணம் திருக்கோயில்களின் பாதுகாப்பில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், தீயணைப்புத் துறையும், பொதுப்பணித்துறையும், இந்து சமய அறநிலையத் துறையும் இணைந்து பணியாற்றிட வேண்டும்.

சமீபத்தில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தினைப் போல், வேறு எங்கும் நிகழக் கூடாது என்பதை நினைவில் கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுடனும் நீங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இயற்கை இடர்பாடுகள் தவிர்க்கமுடியாமல் ஏற்படும்போது, அதன் தாக்கத்தினைக் குறைக்க தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை எப்போதும் தொய்வின்றி தமிழக அரசு எடுத்து, தமிழ்நாட்டு மக்களை “கண்ணை இமை காப்பது போல்” காத்து வருகிறது.

மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை உருவாக்கப்பட்டு, பேரிடர் நேரங்களில் துரிதமாகச் செயல்பட்டு பொதுமக்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. பொதுமக்கள் சிறிது சிறிதாக சேமித்த பணத்தை, பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சில அவ்வப்போது முளைக்கின்றன.

இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். காவல் துறை குறும்படங்களை தயாரித்து அதனை மக்களிடம் எடுத்துச்செல்ல மாவட்ட நிர்வாகமும், காவல்துறை அலுவலர்களும் விழிப்புடன் செயல்பட்டு, சிறிது சந்தேகம் எழுந்தால் கூட, இத்தகு நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது துரிதமாக, சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள், மீண்டும் குற்றம் செய்யாத அளவிற்கு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இடம்தான் சிறைச்சாலை. ஆனால், சிறைச் சாலையினுள் மீண்டும் குற்றம் செய்ய தூண்டும் நடவடிக்கைகள் இருந்தால், சமூகத்தில் குற்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்.

எனவே, சிறைச்சாலைகளில் கண்காணிப்பை மேலும் செம்மைப்படுத்தி, இம்மாதிரி செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சிறைத்துறை அலுவலர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடச் செய்ய வேண்டும் என்பதும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்பதும் தான் இந்த அரசினுடைய குறிக்கோள்” என்ற குறிக்கோளின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.

சட்டம் ஒழுங்கு மற்றும் வளர்ச்சிப் பணிகள் மீது தங்களின் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எடுத்துரைத்து மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். ” இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

1 minute ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

45 minutes ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

51 minutes ago

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

1 hour ago

அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

2 hours ago

கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…

2 hours ago