500 டாஸ்மாக் கடைகள் மூடல், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு; அசத்தல் அறிவிப்பு.!
500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் மற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுவிலக்கு ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், தகுதியான 500 கடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூடப்படும் என அறிவித்துள்ளார்.
அவர் அந்த அறிவிப்பில் கூறியதாவது, தமிழகத்தில் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், தகுதியான 500 மதுபான சில்லரை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும். மேலும் டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதன்படி, டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதிய முறைகளில் பணியாற்றிவரும் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1,100, விற்பனையாளர்களுக்கு ரூ.930, உதவியாளர்களுக்கு ரூ.840 என மாதம் தோறும் ஊதியஉயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அறிவிப்பில் அறிவித்துள்ளார்.