“மதுக்கடைகளை மூடுவது திமுகவுக்கு நல்லது.!” மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் திருமா.!
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடுவது மக்களுக்கும் திமுகவின் எதிர்காலத்திற்கும் நல்லது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை : மது மற்றும் போதைப்பொருட்களை நாடு தழுவிய அளவில் முழுதாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மது ஒழிப்பு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று உளுந்தூர்பேட்டையில் நடத்தியது. இந்த மாநாட்டில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் தேசிய அளவில் மது ஒழிப்பு கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்றும், மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு உரிய இழப்பீடு நிதி வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. அதோடு மாநில அரசும் படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், மதுவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அந்த மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் முன்வைத்தார்.
தற்போது இதே கருத்தை நேற்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் மீண்டும் திருமாவளவன் வலியுறுத்தினார். அப்போது அவரிடம், வரும் சட்டமன்ற அமைச்சரவை கூட்டத்தொடரில் 500 மதுக்கடைகளை மூடுவதாக வெளியான செய்தி குறித்து கேள்வி எழுப்புகையில், “அது வெறும் யூகமாக மட்டுமே இருக்கிறது.” என திருமா பதில் அளித்தார் .
அடுத்து, மது விலக்கு பற்றி பேசுகையில், “தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி மது விலக்கு அமல்படுத்துவது மக்களுக்கும் நல்லது, திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் அதன் எதிர்காலத்திற்கும் நல்லது . இதனை ஒரு தோழமை கட்சி தலைவராக நான் மாண்புமிகு முதலமைச்சர் கவனத்தின் முன்வைக்கிறேன். ” என்று கூறினார் .
தமிழக அரசு 500 மதுக்கடைகளை மூடுவதாக வெளியான செய்தி விசிக மாநாட்டின் வெற்றியா என்ற கேள்விக்கு, “அந்த செய்தி உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.” என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். ஆளும் மாநில அரசு கூட்டணியில் இருந்து கொண்டு மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று விசிக தொடர்ந்து வலியுறுத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறி வருகிறது.