முறையாக அனுமதி பெற்ற கல், கிரஷர் மற்றும் எம்.சாண்ட் குவாரி தொழில்களுக்கு மூடுவிழா – ஈபிஎஸ்

Edappadi Palanisamy

திமுக அரசு முறையாக அனுமதி பெற்ற கல், கிரஷர் மற்றும் எம்.சாண்ட் குவாரி தொழில்களுக்கு மூடுவிழா வைப்பதாக கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில் 10 ஆண்டுகளாக எந்தவிதமான அரசியல் குறுக்கீடுகளுமின்றி கிரஷர் மற்றும் கல் குவாரிகள் சுதந்திரமாக இயங்கி வந்தன. குறிப்பாக, தமிழகத்தின் இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எனது தலைமையிலான அம்மாவின் அரசு கட்டுமானப் பணிகளுக்கு எம். சாண்ட்-ஐ பயன்படுத்த ஊக்குவித்தது.

விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மற்ற துறைகளைப் போலவே கல் குவாரிகளுக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது என்றும்; குறிப்பாக கடந்த சில நாட்களாக சுற்றுச் சூழல் துறை அதிகாரிகளும், கனிம வளத் துறை அதிகாரிகளும் கல்குவாரிகளைப் பார்வையிட்டு பல்வேறு புகார்களைக் கூறி, தேவையற்ற முறையில் குவாரிகளை முடக்கி நசுக்க நினைக்கிறது என்றும் குற்றஞ்சாட்டி, கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்திவிட்டனர். இதனால், தமிழகமெங்கும் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கட்டுமானத் தொழில் முழுமையாக நின்றுவிட்டது.

கல்குவாரி தொழில் செய்வோர் துறை அமைச்சர்களை சந்திக்க நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறியதாக செய்திகள் மூலம் தெரிய வருகின்றன.
GST வரி விதிப்பிற்குப் பிறகு தமிழ் நாட்டில் உள்ள வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கான வரியினை அரசுக்குச் செலுத்தி, பயமின்றி வணிகம் செய்து வருகின்றனர். அதேபோல், மாநில அரசும் கல் குவாரி மற்றும் எம். சாண்ட் ஆகியவற்றிற்கு நேர்மையாக வரி விதித்தால், அவ்வரியினை செலுத்தி நிம்மதியாக, நேர்மையாக தொழில் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக கல் குவாரி உமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.

இதன்மூலம் மாநில அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். தற்போது, டாஸ்மாக் பார் நடத்துவதற்கான அனுமதியினை இந்த விடியா திமுக அரசு வழங்காததால், சட்டவிரோத பார்கள் நடத்தப்பட்டு, அதன் வருமானம் தனிப்பட்ட ஒருசிலரின் பாக்கெட்டுகளுக்கு சென்றதுபோல், குவாரி வருமானம் தனி நபர்களுக்குச் செல்லாமல், அரசின் கஜானாவிற்குச் செல்லும்.

கட்டுமானப் பொருட்களின் விலையும் நிலையாக இருக்கும். இதனால், வீடு உட்பட அனைத்து கட்டுமானப் பணிகளும் தடையின்றி நடைபெறும். தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வேலை வாய்ப்பும் கிடைக்கும். எனவே, இந்த விடியா திமுக அரசு, குறிப்பாக கனிம வளத்துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர்கள், கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி, இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்