தமிழகத்தில் தூய காற்று திட்டத்தை உடனே உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் முதல்வருக்கு கடிதம்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் மாநில தூயக்காற்று செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதற்காக அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 29.7.2021-இல் அளித்துள்ள உத்தரவு தொடர்பாக தங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். ஒரு முழுமையான, அறிவியல்பூர்வமான மாநில தூயக்காற்று செயல்திட்டத்தை, அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் உடனடியாக உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று கோருகிறேன்.
இந்திய அரசின் தேசிய தூயக்காற்று திட்டம் (National Clean Air Programme – NCAP) 2019-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் படி மாநில தூயக்காற்று செயல்திட்டத்தை (State Clean Air Action Plan) உருவாக்குவதற்கான வழிகாட்டு நெறிகளை, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் 2019-ஆம் ஆண்டிலேயே உருவாக்கியிருக்க வேண்டும்.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இச்செயல்திட்டத்தை 2020 ஆம் ஆண்டில் உருவாக்கி, செயல்படுத்தியிருக்க வேண்டும். இது 1981 இந்திய காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின்படி அரசுகளின் சட்டபூர்வமான கடமை ஆகும். ஆனால் 2021-ஆம் ஆண்டு நிறைவடையவிருக்கும் தருவாயிலும் கூட அதற்கான முதற்கட்டப்பணிகள் கூட தொடங்கப்படவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தூயக்காற்று செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் 31.10.2018-இல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. 4.6.2019 மற்றும் 8.11.2019 ஆகிய நாட்களில் இது குறித்து நான் அறிக்கை வெளியிட்டேன்.
20.12.2019 அன்று தூயக்காற்று செயல்திட்டத்தை உருவாக்க வலியுறுத்தி மருத்துவர் அய்யா அவர்கள் அப்போதைய முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்கள். இதே கோரிக்கையை முன்வைத்து 5.9.2020 அன்று நானும் அப்போதைய முதலமைச்சருக்கு கடிதம் எழுதினேன். 6.9.2020 அன்று பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், தமிழ்நாட்டுக்கான தூயக்காற்று செயல்திட்டம் இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
உலகில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உலகிலேயே மிகவும் காற்று மாசடைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு இந்த எண்ணிக்கை 12 லட்சமாக உள்ளது. இந்தியர்களின் மரணத்துக்கு மூன்றாவது பெரிய காரணம் காற்று மாசுபாடுதான். இந்தியாவில் உயிரிழக்கும் 8 பேரில் ஒருவர் காற்று மாசுபாடு காரணமாக இறக்கிறார்.
ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பல நோய்களை காற்று மாசுபாடு உருவாக்குகிறது.காற்று மாசுபாட்டினால் 40% இந்தியர்களின் ஆயுள் 9 ஆண்டுகளுக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது என்று அண்மை ஆய்வு ஒன்று கூறுகிறது. கொரோனா நோய்த்தொற்றில் இறந்தவர்களில் கணிசமானோர் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனின் உயிர்வாழும் உரிமையை உறுதி செய்கிறது. எனவே, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருபோதும் தள்ளிப்போடக் கூடாது. தமிழ்நாடு அரசு உடனடியாக மாநில தூயக்காற்று செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.
இந்திய அரசு அளிக்கும் வழிகாட்டுதல்கள் மட்டுமல்லாமல், தூயக் காற்றுக்கான உலகளாவிய முன்மாதிரிகளையும் உள்ளடக்கியதாக மாநில தூயக் காற்று செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக, ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கியுள்ள ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான 25 நடவடிக்கைகளை (Air Pollution in Asia and the Pacific: Science-based Solutions) உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
பொதுமக்கள், மக்கள் நல அமைப்புகள், அரசியல் கட்சிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் முழு அளவிலான கருத்துக் கேட்பினை நடத்தி தூயக்காற்று செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
இத்திட்டத்தில் ஊராட்சிகள், நகராட்சிகள், மாநராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்டங்கள் என அனைத்து படிநிலைகளிலும் மாசுக்காட்டுப்பாட்டை செயலாக்கும் வழிமுறைகள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறான மாநில தூயக்காற்று செயல்திட்டத்தை தமிழ்நாட்டிற்காக உடனடியாக உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என தங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…