விளையாட்டு நேரத்தில் வகுப்புகள் எடுக்க கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்
இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.
விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்க கூடாது என்று வலியுறுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. தமிழகத்திலேயே முதன்முறையாக திண்டுக்கல்லில் நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி உள்ளோம்.
இந்தத் திட்டத்திற்காக ரூ. 56.25 லட்சம் செலவு செய்ய உள்ளோம். 12,500 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்தத் திட்டத்தில் 15 லட்சம் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க உள்ளோம். ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் 25 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது என தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறினார்.