கோவையில் திமுக – பாஜக இடையே மோதல்! நடந்தது என்ன?
Election2024: கோவையில் அண்ணாமலை பரப்புரையின்போது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் கோவை ஆவரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டபோது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்றிரவு பாஜக மாநில தலைவரும், ஆத்தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அண்ணாமலை இரவு 10 மணிக்கு மேல் பரப்புரை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி திமுகவினர் காவல்துறையை நாடி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி இரவு 10 மணிக்கும் மேல் பிரச்சாரம் மேற்கொள்ள எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என கேட்டுள்ளனர்.
இதையடுத்து, திமுக – பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், பின்னர் காவல்துறை கூட்டத்தை கலைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது அண்ணாமலையின் பிரச்சார வாகனம் அங்கிருந்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த மோதலின்போது பாஜகவினர் தாக்கியதில் திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சியை சேர்த்தவர்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்ய வேண்டும் திமுக, சிபிஎம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மாசாணி, ஆனநதன், லட்சுமி செந்தில், ரங்ககநாதன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை ஆவராம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்துக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.