குடிமராமத்து பணி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு
அரசு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல் என்பது குறைக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை அரசரடியை சேர்ந்த அன்புநிதி என்பவர் மதுரை உயரநீதிமன்றம் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் 2016ம் ஆண்டு குடிமரமாத்து திட்டம் உருவாக்கப்பட்டது. ஆறு, ஏறி, குளங்களை ஆழப்படுத்துவது, கரையை மேம்படுத்துவது போன்றவைகளை மேற்கொள்ளவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016 முதல் 2020 வரை இந்த திட்டத்திற்கு ரூ.928.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ரூ.1,250 கோடி நீர் நிலையங்களில் கொள்ளளவை அதிகரிக்க முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்தார்.
ஆனால், நீர் நிலைகள் அனைத்தும் போதுமான அளவில் நிரம்பவில்லை. இதற்கு அந்த பணிகள் முறையான செய்யப்படாதது தான் காரணம், ஆகையால், தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் குடிமரமாத்து பணிகளின் விவரங்கள் முழுவதும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறிருந்தார். இந்நிலையில், இந்த விசாரணைக்கு வந்தபோது, குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி அல்ல, ஒரு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல் குறைக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணி விவரங்கள் முழுவதும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குடிமராமத்து பணி நடக்கும் முன், பணி முடிந்த பின் எடுத்த படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் இதனை 12 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.