குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணி – 10,000 பேர் மீது வழக்குப்பதிவு
- குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடு முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆலந்தூரில் பேரணி நடைபெற்றது.
- பேரணி நடத்தியதாக 10,000 பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது .கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது.இதனால் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.இதனை தொடர்ந்து சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இதன் விளைவாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னையில் நடைபெற்றது. இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர் திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.இதன் பின்னர் பேரணி நடத்திய தொடர்பாக மு.க.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.பேரணியில் சட்டவிரோத கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை மதிக்காதது, உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.சென்னை ஆலந்தூர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்தாருடன் ஆலந்தூர் பேருந்து பணிமனையில் இருந்து பேரணியாக போராட்டம் நடத்தினர்.தற்போது பேரணி நடத்தியதாக 10,000 பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.