பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக்கூடாதா? – அமைச்சர் கொடுத்த விளக்கம்
மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அர்ச்சகர்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை : மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி கோயில் (முருகன் கோயில்) உள்ளது. இங்கு கோயில் செயல் அலுவலர் அங்கயற்கண்ணி கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அந்த கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி வருகிறது.
இதனால், பக்தர்கள், அர்ச்சகர்களின் தட்டில் வழங்கும் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை பொருட்டு, கடந்த 7ஆம் தேதி கோயில் செயல் அலுவலர் வெளியிட்ட அறிக்கையில் தட்டு காணிக்கை கண்டிப்பாக உண்டியலில் செலுத்த வேண்டும் என்றும், அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அறநிலையத்துறை அறிக்கை :
இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில், மேற்கண்ட கோயில் அர்ச்சகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்தே இக்கோயிலில் தட்டு காணிக்கைகள் திருக்கோயில் கணக்கில் வரவு வைக்கப்படுவது வழக்கம். இருந்தபோதிலும் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி கோயில் செயல் அலுவலரின் சுற்றறிக்கை திருப்ப பெறப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவை திருக்கோயில் தக்காரிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்தது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
அமைச்சர் விளக்கம் :
இது தொடர்பாக இன்று சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், “அந்த திருக்கோயில் முறையை பொறுத்தவரை, ஏற்கனவே அர்ச்சகர்களுக்கு அரசு சார்பில் ஊதியம் அளிக்கப்பட்டு வருகிறது. முன்னரே பக்தர்கள் தட்டில் அளிக்கும் காணிக்கைகளை ஒன்று கூடி உண்டியலில் செலுத்துவது வழக்கம். கடந்த பிப். 7ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தேவையில்லாதது. அந்த ஆணை திரும்ப பெறப்பட்டது. இது தொடர்பாக அந்த செயல் அலுவலரிடம விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.