“கிறிஸ்துமஸ் திருநாளை மாதத்திற்கு ஒருமுறை கூட கொண்டாடலாம்” – பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து!

Default Image

அன்பின் அடையாளமாகவும் கருணையின் வடிவமாகவும் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை,’கிறிஸ்துமஸ்’ திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து பிறந்த நாளை முன்னிட்டு டிச.25 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி,கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,அன்பின் அடையாளமாகவும் கருணையின் வடிவமாகவும் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும்,கிறிஸ்துமஸ் திருநாளை மாதத்திற்கு ஒருமுறை கூட கொண்டாடலாம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“அன்பின் அடையாளமாகவும் கருணையின் வடிவமாகவும் வாழ்ந்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘நண்பர்களிடம் மட்டும் அன்பு காட்டினால் போதாது. எதிரிகளிடமும் அன்பு காட்ட வேண்டும். மனதார மன்னிக்க வேண்டும். யாராவது உங்கள்மேல் கோபமாக இருந்தால், உடனடியாக அவரிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதேபோல் நீங்கள் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டுமென போதித்தவர் இயேசுபிரான்.

கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதன் நோக்கங்களில் முதன்மையானவை மனிதருக்குள் நல்லுறவும், சமத்துவமும், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் உண்டாக வேண்டும்;பூமியில் உள்ளவர்கள் இணக்கமான சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்;ஏழை,எளிய மக்கள் புதுவாழ்வு பெற வேண்டும்;இயற்கையை சுரண்டாமல் இசைந்து வாழும் தன்மை ஏற்பட வேண்டும் என்பன உள்ளிட்டவையாகும்.இந்த நோக்கங்களுக்காகவே கிறிஸ்துமஸ் திருநாளை மாதத்திற்கு ஒருமுறை கூட கொண்டாடலாம்.

ஆனால்,இன்றைய உலகில் இயேசு விரும்பிய நல்லிணக்கமும், சகிப்புத் தன்மையும் இல்லை.அவற்றுக்குத் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. அந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக கிறிஸ்துமஸ் போன்ற விழாக்கள் அனைத்து மதங்களிலும் ஈடுபாட்டுடன் கொண்டாடப்பட வேண்டும்.

இயேசுபிரான் விரும்பியதைப் போல உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்; போட்டி பொறாமைகள் அகல வேண்டும்; ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்;உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்