#BREAKING: ஓபிஎஸ்-ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு ..!
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளராக ஈ.பி.எஸ். போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த டிச.1 ஆம் தேதி நடைபெற்றது.இந்த கூட்டத்தில், கட்சியின் சட்ட விதி 20(அ) பிரிவு திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதன்படி,அதிமுக ஒருங்கிணைப் பாளர்களை கட்சியின் தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்யும் விதமாக சட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும்,பொதுச்செயலாளர் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும், 8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் அவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் நடைப்பெற்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளராக ஈ.பி.எஸ். போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.