தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
Chithirai Festival: தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கோலாகலமாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்தாண்டுக்கான சித்திரை பெருவிழா இன்று தஞ்சாவூர் பெரிய கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க, தமிழ் முறைப்படி திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி கொடியேற்றம் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக கோயிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்த நிகழ்வின்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். எனவே, இன்றிலிருந்து 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு சிறப்புக்கள் உள்ளது. அதில், நாளை மாலை படிச்சட்டத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகளின் வீதியுலா நடைபெறுகிறது.
அதுமட்டுமில்லாமல் விழா நடைபெறும் 18 நாட்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெறவுள்ளது. மேலும், தஞ்சை பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏப்.20 ஆம் தேதி காலை 7 மணிக்கு நான்கு ராஜவீதிகளில் தேரோட்டமும், ஏப்.23ம் தேதி சிவகங்கை பூங்காவில் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளன.