குழந்தைகள் தினம் – வாழ்த்து தெரிவித்து அண்ணாமலை அறிக்கை…!
இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘அளவற்ற ஆர்வம், அற்புதமான அறிவாற்றல் அபரிமிதமான ஆளுமை, ஆக்கபூர்வ சிந்தனை, அகலாத கவனம், என்று இந்தக்காலக் குழந்தைகள் அனைவரும் சாதனைகள் படைப்பதற்காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.
எல்லாக் குழந்தைகளும், ஒரு சாதனைக் கனவுடன் காத்திருக்கிறார்கள். இதில் வியக்க வைக்கும் உண்மை என்னவெனில், குழந்தைகள் அனைவரும், தனித் திறத்துடன், தனித் தன்மையுடன், தணியாத ஆர்வத்துடன், தனித்துவம் மிக்கவர்களாக விளங்குகிறார்கள்.
ஒவ்வொரு குழந்தையின் சிறப்பான தனித்தன்மையைக் கண்டறிந்து, குழந்தைகளுக்கு ஆர்வமான துறையில், அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகமூட்ட வேண்டும். அப்போதுதான் நாம் வலிமையான புதிய பாரதத்தைப் படைக்க முடியும்.
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்! கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை…… என்று நம் மூத்த தமிழ்ப்புலவர் ஒளவைப்பிராட்டியார் பாடியது போல், இளமையில் வறுமைச்சூழலில் குழந்தைத் தொழிலாளர்களாக, வன்கொடுமைக்கு ஆளானவர்களாக, வஞ்சிக்கப்பட்டவர்களாக வாடும் குழந்தைகளை மீட்கவும், குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகளை கிடைக்கச் செய்யவும், நாம் அனைவரும் இந்நாளில் உறுதி எடுப்போம். நம் நாட்டின் மதிப்பிற்குரிய மழலைகளை, மாண்புமிக்க தலைவர்களாக உருவாக்கப் பாடுபடுவோம்.
மழலையருக்கு, குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.’ என தெரிவித்துள்ளார்.
நம் நாட்டின் மதிப்பிற்குரிய மழலைகளை, மாண்புமிக்க தலைவர்களாக உருவாக்கப் பாடுபடுவோம். மழலையருக்கு, குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள். pic.twitter.com/rLo9pErY5l
— K.Annamalai (@annamalai_k) November 14, 2022