விஜயதசமி திருவிழா.! தூத்துக்குடி கலைமகள் ஆலயத்தில் கல்வியை துவங்கிய குழந்தைகள்.., 

விஜயதசமியை முன்னிட்டு தூத்துக்குடி கலைமகள் ஆலயத்தில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் உடன் வந்திருந்து, அரிசியில் 'அ' என எழுதி தங்கள் கல்வியை துவங்கினர்.

Vijayadashami 2024

தூத்துக்குடி : இன்று நாடு முழுவதும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமி நாளன்று கல்வி, புதிய தொழில்கள் என நல்லவற்றை துவங்கினால் அத்துறையில் வெற்றிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாக உள்ளது.

இந்நிலையில் இன்று விஜயதசமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான எஸ்.ஏ.வி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பழமையான கலைமகள் (சரஸ்வதி) ஆலயத்தில் குழந்தைகள் கல்வியை துவங்கும் ‘வித்யா (அறிவு) ஆரம்பம்’ எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடைகள் அணிந்து மாலை அணிவித்து மடியில் அமர வைத்து, அரிசியில் விரலி மஞ்சள் கொண்டு தமிழின் முதல் எழுத்தான ‘அ’ எனும் உயிரெழுத்தை எழுதி தங்கள் குழந்தைகளின் கல்வியை துவங்கினர். இதேபோன்று கரும்பலகையிலும் (சிலேட்டு) அ, ஆ என குழந்தைகளுக்கு எழுத கற்றுக்கொடுத்தனர். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்ற திருக்குறளும் குழந்தைகளுக்கு போதிக்கப்பட்டது.

முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கலைமகள் அலங்காரத்தில் காட்சியளித்த கலை மகளுக்கு(சரஸ்வதி) சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்