“சிறுபிள்ளைதனமானது., ஆளுநர் ரவி ஏன் பதவியில் இருக்க வேண்டும்?” முதலமைச்சர் கடும் தாக்கு! 

அரசின் உரையை ஆளுநர் ரவி, வாசிக்காமலேயே சென்றது சிறுபிள்ளைதனமானது. தனது கடமைகளை செய்ய மனமில்லாதவர் ஏன் பதவியில் நீடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது என முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

TN Governor RN Ravi - Tamilnadu Chief minister MK Stalin

சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம்.

இந்த, முறையும் அதற்கேற்றாற்போல, மாநில அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வசித்து கூட்டத்தொடர் தொடங்குவதாக இருந்தது. ஆனால், சட்டப்பேரவைக்குள் நுழைந்த ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடனேயே அங்கிருந்து வெளியேறினார். முதலில், தான் தேசிய கீதம் இசைக்க சொன்னதாகவும், அதனை அரசு ஏற்கவில்லை என்றும் கூறி ஆளுநர் அங்கிருந்து தனது உரையை சட்டமன்றத்தில் வாசிக்காமலேயே வெளியேறினார்.

இது குறித்து, தனது தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில்,  ” தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான தமிழ்நாடு முதலமைச்சரிடமும், சட்டப்பேரவை சபாநாயகரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.”என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆளுநர் ரவி வெளியேறியது தொடர்பாக தனது கட்டமான விமர்சனத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ”  அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு. அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர்.ஆர்.என்.ரவி .

 கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. “தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?” என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா” என ஆளுநர் ரவி விருப்பமில்லாமல் ஏன் பதவியில் இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்