மதுரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு…!
மதுரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு.
மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை சிவக்குமார் என்பவர் நடத்தி வரும் நிலையில், இங்கு 70-க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அசாருதீன் என்பவர், மேலூர் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா அவரது இரண்டு மகள்கள் ஒரு மகன் ஆகியோரை இந்த காப்பகத்தில் சேர்த்துள்ளார். அதில், ஜூன் 13-ஆம் தேதி ஐஸ்வர்யாவின் ஒரு வயது மகன் மாணிக்கத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தை மாணிக்கம் ஜூன் 29-ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாக தத்தனேரி மயானத்தில் குழந்தையின் சடலம் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவர்களை காப்பகத்தில் சேர்த்த அஸாருதீனிடம் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தை இறந்தது தொடர்பான ஆவணங்களை காப்பக நிர்வாகிகள் அவர்களிடம் கொடுத்ததோடு, அவரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, இதுதொடர்பாக அசாருதீன் புகார் போலீசாரிடம் அளித்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, குழந்தைநல குழுவினர், வருவாய்த்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் குழந்தை கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழக்கவில்லை என்றும், அவர்கள் வழங்கிய ஆவணங்கள் போலியானது என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாணிக்கம் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் வேறு பகுதியை சேர்ந்த குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வேறொரு இடத்தில் குழந்தை மாணிக்கத்தை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, தல்லாகுளம் போலீசார் விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். தற்போது குழந்தை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் காப்பகத்தில் இருந்த ஸ்ரீதேவி என்பவரின் பெண் குழந்தையும் விற்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த குழந்தையையும் போலீசார் மீட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, அந்த காப்பகத்தில் உள்ள மற்ற முதியவர்கள் மற்றும் குழந்தையை மற்ற காப்பகங்களுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அந்த காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. போலி அவங்களை வழங்கிய இதய சிவகுமார் தலைமறைவாக உள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.