விழுப்புரத்தில் பரபரப்பு: பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி – உறவினர்கள் சாலைமறியல்!
பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை லியா லட்சுமி (4) கழிவு நீர் தொட்டியின் மூடி உடைந்ததில் உள்ளே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம் அப்புகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளியின் உணவு இடைவேளையின் போது வகுப்பறையில் இருந்து வெளியே வந்த குழந்தை லியா லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி உடைய, சிறுமி தொட்டிக்குள்ளே விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தகவலின்பேரில் சிறுமி உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதியினர் பள்ளியை முற்றுகையிட, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மறித்து குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.