மீட்பு பணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம்!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தத்தால் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. புயல் சென்னை விட்டு விலகி சென்றதால் மழை சற்று குறைந்துள்ளது.
மறுபக்கம் மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பாதிக்கப்பட்ட இடங்களில் 139 படகுகள் பயன்படுத்தப்பட்டு, மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
சென்னையில் இன்னும் சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னையில் தற்போது மழை இல்லாததால் ஆறுகளில் வெள்ளம் குறைய தொடங்கியுள்ளது. 80% மின் விநியோகம் கொடுக்கப்பட்டுள்ளது. தேங்கிய மழைநீர் குறைந்தவுடன் மீதமுள்ள இடங்களில் மின்வியோகம் கொடுக்கப்படும். இந்த 4 மாவட்டங்களில் 70%தோல்கொதொடர்பு சேவை சீரமைக்கப்பட்டுள்ளது.
மழை பாதித்த பகுதிகளில் ஆவின் நிறுவன பால் சீராக கொடுக்கப்படுகிறது. சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேக்கம் குறைந்து வருகிறது. நீர் தேங்கிய பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. தாழ்வான பகுதிகளில் நீரை வெளியேற்ற 1000 பம்பு செட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணி பெரும் பயனை கொடுத்துள்ளது.
32,158 பேர் வெள்ளம் சூழப்பட்ட இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 3 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆவின் மூலம் 1.26 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், வெகு விரைவில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் தெரிவித்தார்.