விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முதல்வர் கடிதம்.
தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் பருப்பு வகையில் என அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வை தடுப்பது அரசு பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதில், அரிசி, கோதுமை, பருப்பு, தக்காளி போன்ற பொருட்களின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மத்திய அரசின் கையிருப்பில் உள்ள உணவு பொருட்களை விடுவிப்பது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உதவும். மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் உணவு பொருட்களை கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு விலை கட்டுப்படுத்தப்படும். சில உணவுப் பொருட்கள் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும். நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தாலேயே சில உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்த நியாயவிலை கடைகள், பல்பொருள் அங்காடிகள் மூலம் காய்கறிகள், மளிகை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவு பொருள் பணவீக்கத்தில் காணப்படும் கவலைக்குரிய நிலை குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வர விழைகிறேன். உணவு பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பை குறைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.