#BREAKING: பேராசிரியர் க. அன்பழகன் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர்..!
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி அவரின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதற்கு முன்பாக நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகத்திற்கு ” பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” என பெயர் சூட்டி பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அன்பழகனின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.
அப்போது முதலமைச்சருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, பொன்முடி மற்றும் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பேராசிரியர் க.அன்பழகன் திமுகவில் 1977 முதல் 2020 வரை பொதுச் செயலாளராக இருந்தார். மேலும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் கல்வித்துறை, நிதித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.